கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட்ட காணி இன மாணவர்கள்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட்ட காணி இன மாணவர்கள்
x
தினத்தந்தி 13 Aug 2021 11:36 PM IST (Updated: 13 Aug 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அணுமின் நிலையத்தை காணி இன மாணவர்கள் பார்வையிட்டனர்.

நெல்லை:
கூடங்குளம் அணுமின் நிலையத்தை காணி இன மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். 

போட்டித்தேர்வுக்கு பயிற்சி 

வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கத்துடனும், அவர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனும் நெல்லை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக முண்டந்துறை வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களை சீருடை பணியாளர் பணி உள்ளிட்ட பிற அரசு பணிகளிலும், வங்கி போன்ற இதர பணிகளிலும் சேர்ப்பதற்கு திட்டமிட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி முண்டந்துறை அலுவலகத்தில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை தினங்கள் நீங்கலாக நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் மயிலாறு, சேர்வலாறு மற்றும் அகஸ்தியர் காணி குடியிருப்பு பகுதியில் உள்ள 30 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் 

இந்த பயிற்சி வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அரசு அலுவலகங்களை பார்வையிட வேண்டும் என திட்டமிட்டு, அவர்களை கூடங்குளம் அணுமின் நிலையம், தூத்துக்குடி துறைமுகம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்று பார்வையிட நடவடிக்கை வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து காணி பழங்குடியின மாணவர்கள் கூடங்குளத்திற்கு நேற்று முன்தினம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நடைபெறுகின்ற பணிகளை பார்வையிட்டனர். மேலும் மின் உற்பத்தி குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதில் 23 மாணவிகள் உள்பட மொத்தம் 29 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மதிய உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் ஆனந்தன், வேல்மயில் முருகன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நெல்லை மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி, உதவி இயக்குனர்கள் ஹரிபாஸ்கர், மரியஅண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story