கோவில்களில் அனுமதி மறுப்பால் பக்தர்கள் வெளியே நின்று வழிபாடு
கோவில்களில் அனுமதி மறுப்பால் பக்தர்கள் வெளியே நின்று வழிபாடு செய்தனர்.
மீன்சுருட்டி:
கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் 3 நாட்களுக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோவில்களில் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இதில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் நேற்று வந்திருந்தனர். ஆனால் அரசு உத்தரவின்படி கோவில் மூடப்பட்டிருந்ததால், அவர்கள் கோவிலின் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலை சுற்றிப்பார்க்க முடியாததால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆடி கடைசி வெள்ளியையொட்டி மண்மலை கிராமத்தில் உள்ள துர்க்கை காளி அம்மனுக்கு 16 வகையான அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வெளியே நின்று தரிசனம்
தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் தா.பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவில், காரைக்குறிச்சி சவுந்தரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி அம்மன் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களும், தாதம்பேட்டை பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் வழக்கம்போல் அனைத்து பூஜைகளும் நடைபெற்றன. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று பக்தர்கள் பூட்டியிருந்த கோவில்களின் வெளியே நின்று வழிபட்டனர். கிராம பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களில் எளிமையான முறையில் வழக்கமான வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் சமூக இடைவெளியோடு சாமி தரிசனம் செய்தனர். இதில் தா.பழூரில் உள்ள காளியம்மன் வேப்பிலை மற்றும் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விக்கிரமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் விக்கிரமங்கலம் காலனி தெருவில் உள்ள மகாசக்தி மாரியம்மனுக்கு, பக்தர்கள் நேற்று மாலை பால்குடம் மற்றும் காவடி எடுத்து பெருமாள் குளக்கரையில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதி வழியே கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் நேற்றிரவு மகா சக்தி மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. அதேபோல் விக்கிரமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களான கீழநத்தம் சாலை கிராமம், நத்தவெளி போன்ற ஊர்களில் மகாசக்தி மாரியம்மனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Related Tags :
Next Story