வீடு புகுந்து டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை
மெலட்டூர் போலீஸ் நிலையம் அருகே வீடு புகுந்து டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
மெலட்டூர்;
மெலட்டூர் போலீஸ் நிலையம் அருகே வீடு புகுந்து டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீஸ் நிலையம் அருகில்
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் சோமாசி தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(வயது 39). இவரது வீடு மெலட்டூர் போலீஸ் நிலையம் அருகே உள்ளது. டிரைவரான ராஜேஷ்குமாரின் மனைவி கங்காதேவி தனது குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று இருந்தார்.
நேற்று மதியம் ராஜேஷ்குமார் தனது வீட்டின் முன்புற கதவை பூட்டி விட்டு வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் அரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள், ராேஜஷ்குமார் வீட்டின் பின்புற கதவை உடைத்தனர்.
சரமாரி வெட்டிக்கொலை
கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்ட ராஜேஷ்குமார் தூக்கத்தில் இருந்து எழுந்து வீட்டின் பின்புறத்துக்கு சென்றார். அப்போது திடீரென கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வீட்டின் சமையலறையில் வைத்து ராஜேஷ்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் உடலின் பல இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
காரணம் என்ன?
போலீஸ் நிலையம் அருகே உள்ள வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் ஒருவரை வெட்டிக்கொன்ற தகவல் அறிந்த மெலட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட ராேஜஷ்குமாரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
4 தனிப்படைகள்
பின்னர் ராஜேஷ்குமார் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜேஷ்குமார் கொலைக்கான காரணம் என்ன? என்று உடடியாக தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீஸ் நிலையம் அருகே வீடு புகுந்து டிரைவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மெலட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story