வருகிற 19-ந் தேதி பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி


வருகிற 19-ந் தேதி பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி
x
தினத்தந்தி 14 Aug 2021 3:11 AM IST (Updated: 14 Aug 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

அரசு வழங்கிய மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்காக வருகிற 19-ந்தேதி பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட இருப்பதாக மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்தார்.

பெங்களூரு: அரசு வழங்கிய மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்காக வருகிற 19-ந்தேதி பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட இருப்பதாக மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்தார். 

பி.யூ.சி. 2-ம் ஆண்டு

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பரவலை அடுத்து பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டன. 

இதில் திருப்தி அடையாதவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி அரசு வழங்கிய மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்று கூறி தேர்வு எழுத 18 ஆயிரத்து 414 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்கள் 5,546 பள்ளிகளை சேர்ந்தவர்கள்.

19-ந்தேதி தேர்வு

இந்த நிலையில் அந்த மாணவர்களுக்கு பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு வருகிற 19-ந் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 3-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். 

மாணவர்கள் தேர்வு எழுத 187 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.

Next Story