சுதந்திர தின விழா; பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றுகிறார்


சுதந்திர தின விழா; பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 14 Aug 2021 3:11 AM IST (Updated: 14 Aug 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றுகிறார். கொரோனா காரணமாக பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி  பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றுகிறார். கொரோனா காரணமாக  பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சுதந்திர தின விழா

பெங்களூரு மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் கப்பன் பார்க் ரோட்டில் உள்ள மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறுவது வழக்கம். அதுபோல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நடக்கிறது. எப்போதும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக சுதந்திர தினவிழா நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான ஏற்பாடுகள் மானேக்‌ஷா மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு மேடை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும் அதே மைதானத்தில் பெண் கமாண்டோ படையினர், போலீசார் அணிவகுப்பு மரியாதை ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

ஏற்பாடுகள் ஆய்வு

இந்த நிலையில் மானேக்‌ஷா மைதானத்தில் நடைபெற்று வரும் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகளை பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ்குப்தா நேற்று அந்த மைதானத்தில் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா 15-ந் தேதி (நாளை) மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நடக்கிறது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சரியாக காலை 9 மணிக்கு தேசிய கொடி ஏற்றுகிறார். அதன் பிறகு அவர் மைதானத்தில் திறந்த வாகனத்தில் வந்து போலீஸ் படையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். அதன் பிறகு அவர் மேடைக்கு வந்து மாநில மக்களை உத்தேசித்து சுதந்திர தின உரையாற்றுகிறார்.

1,000 இருக்கைகள்

இந்த விழாவில் கர்நாடக ஆயுதப்படை, மத்திய போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, போக்குவரத்து போலீஸ், மகளிர் போலீஸ், ஊர்க்காவல் படை, தீயணைப்பு படை, பேண்டு வாத்திய குழு என மொத்தம் 20 வகையான படையினர் அணிவகுப்பில் கலந்து கொள்கிறார்கள். இதில் மொத்தம் 471 பேர் கலந்து கொள்கிறார்கள். மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இரண்டு பின்புற நுழைவு வாயில்களில் ஸ்கேனர் கருவிகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்த்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க வசதியாக டாக்டர்கள், நர்சுகள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தப்படுவார்கள். ஆம்புலன்ஸ் வாகனங்களும் அங்கு நிறுத்தப்படும். விருந்தினர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அமர 1,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு தடை

கொரோனா பரவல் காரணமாக விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள் மற்றும் இதர பிரிவினர் 100 பேரும், கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களில் 25 பேரும் இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு கவுரவ்குப்தா கூறினார்.
அவரை தொடர்ந்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறியதாவது:-

தீவிர சோதனைக்கு பிறகு அனுமதி

சுதந்திர தின விழாவையொட்டி சிவில் போலீசாருடன் போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை போலீசார், துணை ராணுவ படையினர், அதிரடி போலீசார், மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அத்துடன் சாதாரண உடையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தீயணைப்பு படையினர், அதிவிரைவு படையினரையும் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்துகிறோம். கருடா படையினரும் தயார் நிலையில் வைக்கப்படுவார்கள்.

பாஸ் உள்ளவர்கள் மட்டுமே விழா மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். மைதானத்திற்குள் குடிநீர் பாட்டில், எளிதில் தீப்பற்றும் பொருட்கள், கத்தி போன்ற ஆயுதங்கள், பட்டாசு போன்வற்றுக்கு அனுமதி இல்லை. கேமராக்கள், மது பாட்டில்களுக்கும் அனுமதி கிடையாது. விழாவுக்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு கமல்பந்த் கூறினார்.

Next Story