கர்நாடக அரசுக்கு, பா.ஜனதா எம்.எல்.ஏ. குமாரசாமி எச்சரிக்கை
எனது தொகுதி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காவிட்டால் அடுத்தகட்ட முடிவு எடுப்பேன் என்று எம்.பி.குமாரசாமி எம்.எல்.ஏ., அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு: எனது தொகுதி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காவிட்டால் அடுத்தகட்ட முடிவு எடுப்பேன் என்று எம்.பி.குமாரசாமி எம்.எல்.ஏ., அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொகுதியின் வளர்ச்சி
பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் எம்.பி.குமாரசாமி எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் தனது தொகுதிக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பதாக கூறி பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பு தனி ஆளாக தர்ணா போராட்டம் நடத்தினார். ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரே, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியது பா.ஜனதாவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் அங்கு வந்து அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்.
இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை பெங்களூருவில் எம்.பி.குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார். அப்போது முதல்-மந்திரி, மூடிகெரே தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை ஒதுக்குவதாக உறுதியளித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு எம்.பி.குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சித்தராமையா பிடித்த தலைவர்
எனது தொகுதிக்கு நிதி ஒதுக்க வேண்டி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது எனக்கு வருத்தம் அளிக்கிறது. எனது தொகுதிக்கு நிதி ஒதுக்குவதாக முதல்-மந்திரி உறுதி அளித்துள்ளார். அவரது உறுதிமொழியை நம்புகிறேன். எனது தொகுதியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கு நிதி ஒதுக்காவிட்டால் தொகுதி மக்களை எப்படி எதிர்கொள்ள முடியும். எனது தொகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. இதுகுறித்து முதல்-மந்திரியிடம் கூறியுள்ளேன்.
எனது தொகுதிக்கு நிதி ஒதுக்காவிட்டால் அடுத்தகட்ட முடிவு எடுப்பேன். சித்தராமையா எனக்கு பிடித்தமான தலைவர். பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் ஒட்டுமொத்த தலைவராக அவர் திகழ்கிறார். அதனால் அவரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினேன். அரசியல் ரீதியாக எனக்கும், சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கும் இடையே நல்லுறவு கிடையாது.
இவ்வாறு எம்.பி.குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story