கோட்டையில் சுதந்திர தின விழா: காமராஜர், ராஜாஜி சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் போலீசார் அறிவிப்பு
சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி காமராஜர், ராஜாஜி சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெருநகர சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவையொட்டி நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை அந்த பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
அதாவது, உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவு சின்னம் வரையிலான காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரையிலான ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலை ஆகிய சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர மற்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜாசாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.
பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை, தலைமை செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாரிஸ் கார்னர், வடக்கு கோட்டை பக்கசாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.
அண்ணா சாலையில் இருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, வடக்கு கோட்டை பக்கசாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். முத்துசாமி பாலத்தில் இருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜார் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.
சிவப்பு மற்றும் ஊதா கலர் வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமை செயலக உள்வாயிலின் அருகே இறங்கி கொண்டு, வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும்.
சிவப்பு மற்றும் ஊதா கலர் வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணிக்கு பின்னர் காமராஜர்சாலை, உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, வாலாஜா முனை, கோட்டை ரெயில் நிலைய சாலை, ஜார்ஜ் கேட்டின் வழியாக கோட்டையை அடையவேண்டும்.
நீல மற்றும் இளஞ்சிவப்பு (பிங்க்) கலர் அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை, போர் நினைவுச்சின்னம், கொடிமரச் சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி ரோடு, வடக்குகோட்டை பக்கசாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக்கொண்டு வாகனங்களை தலைமைச்செயலகத்திற்கு எதிரில் உள்ள பொதுப்பணித்துறை வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
நீல மற்றும் இளஞ்சிவப்பு (பிங்) கலர் அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், வடக்கு கோட்டைபக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக தலைமைச்செயலகத்திற்கு எதிரில் உள்ள பொதுப்பணித்துறை வாகன நிறுத்தத்தில் நிறுத்தவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story