கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 58 நாட்களில் பூண்டி ஏரிக்கு 3.085 டி.எம்.சி. நீர்வரத்து
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட 58 நாட்களில் 3.085 டி.எம்.சி. நீர் வந்து சேர்ந்துள்ளது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது.
அவ்வாறு சேமித்து வைக்கப்படும் தண்ணீர் தேவைப்படும் போது புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். மேலும் சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி, கடந்த ஜூன் 16-ந்தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் உயரம் கிடு, கிடு என்று உயர்ந்து வருகிறது.
இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 31.85 அடி ஆக பதிவாகியது. 2.201 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது ஏரியின் மொத்த கொள்ளளவில் 68 சதவீதம் ஆகும்.
கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் நேற்று காலை வரை 58 நாட்களில் பூண்டி ஏரிக்கு 3.085 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஏரிக்கு வினாடிக்கு 557 கன அடியாக நீர் வந்து கொண்டிருந்தது.
பூண்டிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 312 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரி சில நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story