சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை


சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 14 Aug 2021 12:18 PM IST (Updated: 14 Aug 2021 12:18 PM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் போலீசார் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

திருவள்ளூர்,

நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் விமானநிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் கடும் பரிசோதனைக்காக உட்படுத்தப்படுகின்றனர்.

சுதந்திரதினத்தையொட்டி, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டு ஏற்றுக்கொள்வர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தேசியக்கொடியை ஏற்றிவைக்க உள்ளார். இதன் காரணமான திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்ப நாய் மூலம் தீவிர பரிசோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் திருவள்ளூர் ரெயில் நிலைய நடைபாதை, வாகன நிறுத்துமிடம், தண்டவாளம், படிக்கட்டுகள் போன்ற பல்வேறு பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிரமாக பரிசோதித்தனர். அதைத்தொடர்ந்து, திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தேரடி வரை இயக்கப்படும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களை அழைத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விழிப்புணர்வு நடத்தினார்கள்.

அதில் ஆட்டோக்களில் சந்தேகப்படும்படியாக யாரும் வெளி நபர்கள் ஏறினாலோ, கேட்பாரற்று கிடக்கும் பைகள், பொருள்கள் போன்றவற்றை கண்டாலும் உடனடியாக இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

Next Story