திருவள்ளூர் அருகே பரிதாபம்; கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 6-ம் வகுப்பு மாணவன் சாவு
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் குளித்த 6-ம் வகுப்பு பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியானான்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த தலக்காஞ்சேரி மேலாண்டை தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் விஷாந்த் (வயது 12). இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்று விஷாந்த் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததாலும், நீச்சல் தெரியாததாலும் அவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதை கண்டவுடன் குளித்துக்கொண்டிருந்த சக நண்பர்கள் வெளியே ஓடிவந்து பொதுமக்களை உதவிக்கு அழைத்தனர். பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை.
இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கும், புல்லரம்பாக்கம் போலீசாருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் நீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது பூண்டி ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சிறுவனின் உடலை மீட்க முடியவில்லை. பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி 3 கிலோமீட்டர் தொலைவிற்கு அடித்துச்செல்லப்பட்டு திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் முட்புதரில் சிக்கி இருந்த விசாந்த் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த விசாந்தின் உடலை பார்த்து அவரது குடும்பத்தார், உறவினர்கள், பொதுமக்கள் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
அதேபோல், சென்னை திருமங்கலம் பகுதியில் வசிப்பவர் லலித் (வயது 17). இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலாவுக்காக நேற்று வந்தனர். பழவேற்காடு ஏரியில் நண்டுபாடு திட்டில் 6 பேரும் இறங்கி ஏரியில் குடித்துக்கொண்டிருந்தபோது, லலித் நீரில் மூழ்கி மாயமானார்.
பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேற்றில் சிக்கிய பலியான லலித் உடலை மீட்டு, பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story