ஜவுளி உற்பத்தி துறை எதிர்நோக்கும் சவால்கள்
ஜவுளி உற்பத்தி துறை எதிர்நோக்கும் சவால்கள்
கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி உற்பத்தி துறை சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
ஜவுளி உற்பத்தி
கோவை மண்டலத்தில் ஜவுளி உற்பத்தி தொழில் ஏராளமானவர்க ளுக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகிறது. மேலும் ஏற்றுமதி மூலம் அன்னிய செலவாணியை ஈட்டி வருகிறது.
இந்தியாவில் உள்ள மொத்த தொழிலில் ஜவுளி உற்பத்தி 3-ல் ஒரு பகுதி பங்களிப்பை அளித்து வருகிறது. இந்தியா முழுவதும் 3,542 பெரிய நூற்பாலைகள் உள்ளன.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,032 பெரிய நூற்பாலைகள் உள்ளன. இதில் 70 சதவீதம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளில் உள்ளன.
நாடு முழுவதும் 3 லட்சத்து 85 ஆயிரத்து 596 விசைத்தறிகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 89,449 உள்ளன.
நாடு முழுவதும் 28 லட்சத்து 26 ஆயிரம் கைத்தறிகள் உள்ளன. இதில், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 18 ஆயிரம் உள்ளது. கதிர்கள் என்று சொல்லப்படும் ஸ்பிண்டில் தமிழ்நாட்டில் 24 லட்சத்து 4 ஆயிரம் உள்ளது.
மொத்த பருத்தி உற்பத்தியில் 3 கோடியே 60 லட்சம் பேல்கள் நாடு முழுவதும் உற்பத்தியாகிறது. இதில் 6 லட்சம் பேல் பருத்தி தமிழ்நாட் டில் விளைகிறது. ஜவுளி உற்பத்தியில் மொத்த வர்த்தகம் ரூ.9 லட்சம் கோடியாகவும், ஏற்றுமதி ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கோடியாகவும் உள்ளது.
கொரோனா தாக்கம்
கொரோனா தாக்கம் ஜவுளித்தொழிலையும் விட்டு வைக்கவில்லை. அனைத்து நூற்பாலைகளும் மூடப்பட்டதால் உற்பத்தி முடங்கியது.
கோவை மாவட்டத்தில் ஜவுளி மில்களில் வேலை பார்க்கும் தொழிலா ளர்களில் 50 சதவீதம் பேர் வடமாநிலம் மற்றும் தமிழகத்தில் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இதனால் ஜவுளித் தொழில் மந்தநிலையை அடைந்தது. ஆனால் தற்போது வளர்ச்சியை நோக்கி செல்ல தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தென் இந்திய நூற்பாலைகள் சங்க (சைமா) பொதுச்செயலாளர் கே.செல்வராஜ் கூறியதாவது
கொரோனா தாக்கத்துக்கு பிறகு ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகள் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளன. கோவை மட்டுமின்றி நாடு முழு வதும் ஜவுளி உற்பத்திக்கு நல்ல எதிர்காலம் உருவாகி உள்ளது.
கொரோனா தாக்கத்தின் போது முடங்கி கிடந்த ஜவுளியை காப்பாற்ற மத்திய அரசு 5 சதவீத வட்டி மானியம் வழங்கியது. இது மிகவும் உதவியாக அமைந்தது.
விவசாயிகளுக்கு சலுகைகள்
ஆயத்த ஆடை மற்றும் பொது ஜவுளி ஆகியவற்றின் ஏற்றுமதி எதிர் காலத்தில் மேலும் உயரும். நூற்பாலை, கைத்தறி, விசைத்தறிகள் மூலம் ஜவுளி உற்பத்தி தமிழ்நாட்டில் 17 லட்சம் பேரும், கோவை மண்டலத் தில் 10 லட்சம் பேரும் வாய்ப்பை பெற்று வருகிறார்கள். நூற்பாலைகளின் மூலம் 3 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.
ஜவுளி தொழிலின் முக்கிய மூலப்பொருளான பருத்தி தமிழ்நாட்டில் 6 லட்சம் பேல் தான் விளைகிறது. நீண்டஇழை பருத்திக்கு எப்போதும் எதிர்காலம் உள்ளது. இதன் விளைச்சலை 25 லட்சம் பேல்களாக உயர்த்த வேண்டும்.
தமிழ்நாட்டில் கோவை, சேலம், ராஜபாளையம், தேனி, விழுப்புரம் கள்ளக்குறிச்சி பகுதிகளில் பருத்தி விளைச்சல் உள்ளது. எனவே பரப்பளவை மேலும் அதிகரிப்பதுடன் பருத்தி விவசாயிகளுக்கு மாநில அரசு மேலும் சலுகைகளை அளிக்க வேண்டும்.
செயற்கை இழை பருத்தி
செயற்கை இழை பருத்தி ஜவுளி உற்பத்திக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை குஜராத், மராட்டிய மாநிலங்களில் இருந்து கொண்டு வர போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளால் ஒரு கிலோவுக்கு ரூ.5 அதிகம் செலவு செய்ய வேண்டியது உள்ளது.
எனவே தமிழ்நாட்டில் செயற்கை இழை பருத்தி, விஸ்கோஸ் பருத்தி ஆகியவற்றை உற்பத்தி செய்ய மாநில அரசு கூடுதல் நடவடிக்கை எடுத்தால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் மேலும்
முன்னேற்றம் அடையும்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் ஜவுளி பூங்காக்கள் அமைப்பது, சிப்காட் வசதிகளை மேம்படுத்துவது போன்ற அறிவிப்புகள் ஜவுளித் துறையின் அனைத்து பிரிவுகளுக்கும்
வளர்ச்சியை ஏற்படுத்தும். மதிப்பு கூட்டு வரி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில் ஒரு சமாதான் திட்டத்தை அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது.
இது தொழில்துறைக்கும், அரசுக்கும் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத் தும். பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பு, பதனிடும் ஆலைகளுக்கு பயனை அளித்து இந்த தொழில் மேலும் வளர்ச்சி அடைய உதவும்.
1000 ஏக்கரில் மெகா பார்க்
ஜவுளித்துறை வளர்ச்சிக்காக இந்தியா முழுவதும் 10 மெகாபார்க் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் 3 மெகா பார்க்குகள் தமிழ்நாட்டில் அமைய உள்ளன.
எங்களை பொறுத்தவரை தூத்துக்குடி துறைமுகம் அருகே 1000 ஏக்கரில் மெகாபார்க் அமைப்ப தால் ஏற்றுமதி, இறக்குமதிக்கு வசதியாக இருக்கும்.
பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதால் மின்சார கட்டண இடர்பாடுகளை சரி செய்து, கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story