சித்தர்கள் தவம் செய்த மலையில் மெய்சிலிர்க்க வைக்கும் பஞ்ச பாண்டவர்கள் குகை
சித்தர்கள் தவம் செய்த மலையில் அமைந்துள்ள பஞ்ச பாண்டவர்கள் குகை மெய்சிலிர்க்க வைக்கிறது.
திண்டுக்கல்:
சித்தர்கள் தவம் செய்த மலையில் அமைந்துள்ள பஞ்ச பாண்டவர்கள் குகை மெய்சிலிர்க்க வைக்கிறது.
சித்த மகாலிங்கம் மலை
தெய்வீகம் நிறைந்த புராணம் மற்றும் வீரம் விளைந்த வரலாற்று நிகழ்வுகள், திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளம். இதற்கான சான்றுகள் இன்றும் பல பகுதிகளில் காண கிடைக்கின்றன. அரிய பொக்கிஷமான அவை பற்றிய தகவல்கள் காதுகளை கூர்மையாக்கி, விழிகளை விரிய வைப்பதாக இருக்கும்.
அந்த வரிசையில் வியக்க வைக்கும் விஷயங்கள் நிறைந்ததாக, நிலக்கோட்டை அருகே சித்தர்கள்நத்தம் பகுதியில் எஸ்.மேட்டுப்பட்டியில் உள்ள சித்தமகாலிங்கம் மலை திகழ்கிறது. நித்தமும் இறைவனை நினைத்து சித்தர்கள் தவம் செய்த மலை ஆகும். இதுமட்டுமின்றி மலை உச்சியில் சித்தமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இதனால் சித்த மகாலிங்கம் மலை என்று அழைக்கப்படுகிறது.
பிரமாண்ட குகை
பசுமையை சுமந்து நிற்கும் சித்த மகாலிங்கம் மலை, பழமையான நினைவுகளையும் தாங்கி பிடிக்கிறது. திண்டுக்கல்-மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சித்த மகாலிங்கம் மலையின் பின்பகுதியில் பிரமாண்ட குகை உள்ளது. மலை உச்சியில் இருந்து சிறிய பாறை படிக்கட்டில் கம்பியை பிடித்தபடி குகைக்கு செல்ல வேண்டும். பெரிய பாறையின் மீது மற்றொரு பாறை அமைந்து இருப்பது போன்று இருக்கிறது.
ஆனால் இரு பாறைகளும் ஒருபக்கத்தில் சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு ஒட்டாமல் இருப்பது பெரிய ஆச்சரியம். இதன் நடுவே குகை அமைந்து இருக்கிறது. சுமார் 3 அடி உயரத்தில் இருக்கும் நுழைவுவாயிலில் புகுந்து உள்ளே சென்றால் 100 பேர் அமரும் வகையில் குகை விசாலமாக உள்ளது.
அதற்குள் ஒரு சுரங்கப்பாதை போன்று செல்கிறது. அதன் வழியாக சென்றால் மலையின் மறுபக்கம் சென்று விடலாம் என்று கூறுகிறார்கள்.
பஞ்ச பாண்டவர் குகை
இந்த குகைக்குள் 2 இடங்களில் மொத்தம் 9 கற்படுக்கைகள் செதுக்கப்பட்டு உள்ளன. இங்கு கற்படுக்கைகள் மட்டுமின்றி பிற இடங்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. அவை பழமையை பறைசாற்றுவதாக அமைந்து இருக்கிறது. மேலும் இங்கு சமண துறவிகள் தங்கி இருந்து உள்ளனர். இந்த குகையில் வெயில் நேரத்தில் குளிர்ச்சியும், மழை காலத்தில் இதமான வெப்பமும் நிலவுவதாக கூறுகின்றனர்.
இதனை பஞ்ச பாண்டவர் குகை என்றே மக்கள் அழைக்கின்றனர். பஞ்ச பாண்டவர்கள் இங்கு தங்கி சென்றார்களாம். மேலும் ஒரு பீடத்தின் மீது பாறையில் ராமர் பாதம் உள்ளது. அதேபோல் சிறிய ராமர் சிலையும் அங்கு இருக்கிறது. ஆட்டு உரல் அமைப்பு போன்றவையும் உள்ளன. குகையின் அமைப்பும், பசுமையில் துய்த்து வரும் தென்றலும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
மேலும் குகைக்குள் கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்தால் மனம் அமைதியாகி விடுகிறது. இந்த அனுபவத்தை பெறுவதற்காகவே பலர் அங்கு வருகின்றனர். குகைக்குள் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்கின்றனர். அதோடு கற்படுக்கைகளில் தங்களுடைய உடலை சாய்த்து துயரத்தை துடைத்து விட்டு செல்கின்றனர். இந்த குகையை பார்ப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story