விவசாயி வீட்டில் ரூ.7½ லட்சம் நகை- பணம் கொள்ளை


விவசாயி வீட்டில் ரூ.7½ லட்சம் நகை- பணம் கொள்ளை
x
தினத்தந்தி 14 Aug 2021 10:50 PM IST (Updated: 14 Aug 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் ரூ.7½ லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் நத்தமேட்டை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது 59), விவசாயி. இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் நிலம் உள்ளது. தற்போது அந்த நிலத்தில் கோதண்டபாணி, மணிலா பயிர் செய்துள்ளார். காட்டுப்பன்றிகளிடம் இருந்து மணிலா பயிரை காப்பாற்ற கடந்த சில நாட்களாக கோதண்டபாணி, இரவு நேரத்தில் தனது நிலத்திற்கு சென்று அங்கேயே தங்கியிருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோதண்டபாணியும், அவரது மனைவி ரேணுகாவும் வீட்டை பூட்டிவிட்டு நிலத்திற்கு சென்று விட்டனர். பின்னர் நேற்று காலை 6 மணியளவில் இருவரும், வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

நகை-பணம் கொள்ளை

உடனே உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.42 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, போலீஸ் மோப்ப நாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. இந்த நாய், கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி பேரங்கியூர் மெயின்ரோடு வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

நள்ளிரவில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.7½ லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story