குன்னத்தூர் சார்பதிவாளர் அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு


குன்னத்தூர் சார்பதிவாளர் அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2021 11:23 PM IST (Updated: 14 Aug 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

குன்னத்தூர் சார்பதிவாளர் அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு காரணமாக அலுவலகத்துக்கு வரும் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள்.

திருப்பூர்
குன்னத்தூர் சார்பதிவாளர் அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு காரணமாக, அலுவலகத்துக்கு வரும் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள்.
சார்பதிவாளர் அலுவலகம்
குன்னத்தூர் விவசாயம் மற்றும் விசைத்தறிக்கூடங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு ரிக் தொழில் பிரதானம். ஆழ்குழாய் அமைப்பதற்கான போர்வெல் லாரிகள் அதிகம் உள்ளன. குன்னத்தூரில் செங்கப்பள்ளி செல்லும் ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. குன்னத்தூர் சுற்றுவட்டார பகுதியான ஆலம்பாளையம், எருமைக்காரம்பாளையம், கணபதிபாளையம், குறிச்சி, குன்னத்தூர், கூனம்பட்டி, கொமரகவுண்டம்பாளையம், சின்னாரிபாளையம், சாந்திபாளையம், சின்னேகவுண்டன்வலசு, செங்காளிபாளையம், செட்டிக்குட்டை, காவுத்தம்பாளையம், கருமஞ்சிறை, கம்மாளக்குட்டை, சொக்கனூர், தொரவலூர், நவக்காடு, நெட்டிச்சிப்பாளையம், மேற்குபதி, வட்டாலப்பதி, வள்ளிபுரம், விருமாண்டம்பாளையம், வெள்ளிரவெளி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பத்திரப்பதிவு, ஆவண பதிவுகளுக்கு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து செல்கிறார்கள்.
குன்னத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றிலும் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவுவாசல் முன்புறம் சாலையோரம் ஒருபகுதியில் வாடகைக்கு செல்லும் வேன்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறுபுறம் கொட்டகை அமைக்கப்பட்டு மாடுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. அதாவது சார்பதிவாளர் அலுவலக வாசல் அருகிலேயே மாடுகள் கட்டி வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பட்டுள்ளன. முகூர்ந்த நாட்களில் பத்திரப்பதிவு அதிகமாக நடைபெறும். அன்று மக்கள் அதிகம் வரும்போது அவர்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை அலுவலகத்தின் முன்புறம் நிறுத்தி வைக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகிறார்கள். அந்தளவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளது.
ஆக்கிரமிப்புகளால் அவதி
அதுபோல் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் இருக்கும் புற்களை மாடுகள் மேயும் அளவுக்கு உள்ளது. பிரதான சாலையோரம் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளதால், பத்திரப்பதிவு அதிகம் நடக்கும் நாட்களில் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் சாலையோரம்  தாறுமாறாக நிறுத்துவதால் அந்த ரோட்டில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பத்திரப்பதிவுக்காக வருபவர்கள் பணத்தையும் எடுத்து வருவார்கள். ஆனால் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு வாகன நிறுத்த வசதி குறைவு காரணமாக பாதுகாப்பாற்ற சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் அவதியை சந்தித்து வருகிறார்கள்.
குன்னத்தூர் சார்பதிவாளர் அலுவலகம் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்கள் வந்து செல்வதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.

Next Story