வேலை வாங்கி தருவதாக மோசடி: இ-சேவை மைய தற்காலிக பெண் ஊழியர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த இ-சேவை மைய தற்காலிக பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவர் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.
எலச்சிபாளையம்:
வேலை வாங்கி தருவதாக மோசடி
திருச்செங்கோடு சேலம் சாலை பகுதியை சேர்ந்தவர் குமரேசன். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி சரிதா (வயது 28). இவர் திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் கடந்த ஓராண்டாக தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இதனிடையே சரிதா, தனக்கு பணம் கொடுத்தால் இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையங்களில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய பலர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர். இதனை பெற்றுக்கொண்ட அவர், பணம் கொடுத்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை போலியாக தயாரித்து வழங்கியுள்ளார்.
கைது
இதுகுறித்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நில அளவை உதவி இயக்குனர் சிவக்குமார் திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சரிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக சரிதாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் தான், சரிதா எத்தனை பேரை ஏமாற்றினார்? எவ்வளவு தொகை மோசடி செய்தார்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரியவரும் என்று போலீசார் கூறினர்.
Related Tags :
Next Story