திருமயம் அருகே ரூ.7½ லட்சம் உளுந்து மூட்டைகளை திருடிய வழக்கில் 5 பேர் கைது 4 வாகனங்கள் பறிமுதல்
ரூ.7½ லட்சம் உளுந்து மூட்டைகளை திருடிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமயம்:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்தவர் பிச்சைமணி. லாரி டிரைவர். இவர், கடந்த 3-ந் தேதி பட்டுக்கோட்டையிலிருந்து 200 உளுந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரில் இருந்து ஒரு காரில் வந்த 5 பேர் திருமயம் அருகே மலைக்குடிப்பட்டி என்ற இடத்தில் லாரியை வழிமறித்து அவரிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை திருடிக்கொண்டு, லாரி டிரைவரை கட்டி காரில் ஏற்றி திருக்கோஷ்டியூர் என்ற இடத்தில் டிரைவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். மேலும் லாரியில் இருந்த 136 உளுந்து மூட்டைகளை மட்டும் வேறு ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதுகுறித்து லாரி டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில் தனிப்படை போலீசார் வழக்குப்பதிந்து திருப்பத்தூர், மதுரை ஆகிய ஊர்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரியை கடத்தியவர்கள் மதுரையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சிவகங்கை மாவட்டம் அரசம்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது 20), மதுபாலன் (20), ரஞ்சித்குமார் (20), தேனி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (35), முருகன் (37) ஆகிய 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 200 மூட்டை உளுந்து, ரூ.20 ஆயிரம், ஒரு கார், 2 சரக்கு வேன், 2 லாரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேரையும் திருமயம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் இந்திரா காந்தி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story