மனைவியை கொன்று வீட்டின் பின்புறம் எரித்து அணையில் அஸ்தி கரைப்பு


மனைவியை கொன்று வீட்டின் பின்புறம் எரித்து  அணையில் அஸ்தி கரைப்பு
x
தினத்தந்தி 15 Aug 2021 1:22 AM IST (Updated: 15 Aug 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதல் பிரச்சினையால் காதல் மனைவியை கொன்று வீட்டின் பின்புறம் உடலை எரித்த தொழிலாளி, கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர், 
கள்ளக்காதல் பிரச்சினையால் காதல் மனைவியை கொன்று வீட்டின் பின்புறம் உடலை எரித்த தொழிலாளி, கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார். 
பெண் மாயம் 
விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை அகதிகள் முகாமில் வசிப்பவர் மூர்த்தி (வயது47). கட்டிட தொழிலாளியான இவர் தனது சகோதரி நிர்மலா தேவி என்ற பேபியை (32) கடந்த 9-ந் தேதி முதல் காணவில்லை என்று சூலக்கரை போலீசில் புகார் செய்தார்.
 போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவிைய காணவில்லை என்று அவருடைய கணவர் புகார் செய்யாததால் போலீசாருக்கு அவரது கணவர் நாகமுத்து (35) மேல் சந்தேகம் எழுந்தது.  எனவே நாகமுத்துவை தேடிச்சென்றபோது அவர் அங்கு இல்லாமல் வரலொட்டி கிராமத்தில் உறவினர் வீட்டில் இருந்தது தெரியவந்தது.
காதல் மனைவி
 போலீசார் அங்கு சென்று நாகமுத்துவை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, நாகமுத்து தனது காதல் மனைவியை கொன்று எரித்ததாக தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தையை சேர்ந்தவரான நாகமுத்து, கட்டிட தொழிலாளியாக ேவலைபார்த்து வந்தார். இவர் குல்லூர்சந்தை அகதிகள் முகாமில் வசிக்கும் சக கட்டிட தொழிலாளியான மூர்த்தியின் சகோதரி நிர்மலாதேவியை கடந்த 13 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நாகமுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாலவநத்தம் ரோட்டில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். 
கள்ளக்காதல்
 இந்நிலையில் நாகமுத்துவுக்கும், கட்டிட சித்தாளாக அவருடன் வேலைசெய்த குல்லூர்சந்தையை சேர்ந்த முனீசுவரிக்கும் (35)  கள்ளதொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.முனீசுவரியும் ஏற்கனவே திருமணமானவர். தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். 
இ்ந்த கள்ளக்காதலால் நிர்மலாதேவிக்கும், நாகமுத்துவுக்கும் இடைேய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுபற்றி நிர்மலாதேவி விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து பேசி நிர்மலா தேவியுடன், குடும்பம் நடத்துமாறு நாகமுத்துவுக்கு அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து நிர்மலா தேவியும், நாகமுத்துவும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனாலும் முனீசுவரியுடனான அவரது கள்ளத்தொடர்பு நீடித்தது. இதற்கிடையில் நிர்மலா தேவிக்கு குல்லூர்சந்தையை சேர்ந்த மாணிக்கம் என்ற கட்டிடத் தொழிலாளியுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நிர்மலாதேவி அடிக்கடி மாணிக்கத்துடன் செல்போனில் பேசி வந்ததை நாகமுத்து கண்டித்ததால் இருவருக்கும் இடையில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு நிர்மலாதேவி, நாகமுத்துவைவிட்டு பிரிந்து அல்லம்பட்டியில் தனியாக ஒருவாடகை வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
அடித்துக்கொலை 
இதையடுத்து நாகமுத்து கடந்த 9-ந் தேதி நிர்மலா தேவியை சந்தித்து நம் குழந்தைகளுக்காக நாம் சேர்ந்து வாழ்வோம் என்று சமரசம் பேசி ஒரு ஆட்டோவில் நிர்மலாதேவி மற்றும் குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அன்று மதியம் நாகமுத்து தனது குழந்தைகளுக்கு புரோட்டா வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது நிர்மலாதேவி, மாணிக்கத்துடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நாகமுத்து தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வரலொட்டி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் விட்டு விட்டு மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்கு திரும்பிய பின்பும் தகராறு தொடர்ந்தது.
தகராறு முற்றியதில் நாகமுத்து வீட்டில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து நிர்மலாதேவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிர்மலாதேவி அந்த இடத்திலேயே கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
உடல் எரிப்பு
 இதனால் அதிர்ச்சி அடைந்த நாகமுத்து இதுபற்றி தனது கள்ளக்காதலி முனீசுவரிக்கு தகவல் தெரிவித்து தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இதன்பின்பு நாகமுத்து நிர்மலாதேவியின் உடலை வீட்டின் பின்புறமுள்ள தகரசெட் பகுதிக்கு கொண்டுசென்று, பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். அப்போது முனீசுவரியும் உடன் இருந்துள்ளார்.
இதனையடுத்து மறுநாள் அதிகாலையில் நிர்மலா தேவியின் உடலை எரித்த இடத்தில் கிடந்த சாம்பலை இருவரும் சேகரித்து குல்லூர் சந்தை அணைக்கு கொண்டு சென்று கரைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தன. 
கைது 
இதையடுத்து சூலக்கரை போலீசார் நாகமுத்துவையும் அவரது கள்ளக்காதலி முனீசுவரியையும் கைது செய்தனர். 
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை 

Next Story