எடியூரப்பாவுடன் பசவராஜ் பொம்மை திடீர் ஆலோசனை


எடியூரப்பாவுடன் பசவராஜ் பொம்மை திடீர் ஆலோசனை
x
தினத்தந்தி 15 Aug 2021 2:28 AM IST (Updated: 15 Aug 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

இலாகா ஒதுக்கீடு செய்ததில் மந்திரிகள் அதிருப்தியில் இருந்து வருவதால், எடியூரப்பாவை நேற்று திடீரென்று சந்தித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு:

எடியூரப்பாவுடன் ஆலோசனை

  கர்நாடகத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசில் மந்திரி பதவி கிடைக்காமல் சில எம்.எல்.ஏ.க்களும், இலாகா ஒதுக்கீடு செய்ததில் சில மந்திரிகளும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டுக்கு நேற்று காலையில் சென்ற ராமதாஸ் எம்.எல்.ஏ, அவரை சந்தித்து பேசினார். அப்போது தனக்கு மந்திரி பதவி வழங்காததால், அதற்கான அதிருப்தியை பசவராஜ் பொம்மையிடம் ராமதாஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

  அதன்பிறகு, மந்திரி பதவி பறிக்கப்பட்ட எம்.எல்.சி.யான சி.பி.யோகேஷ்வர், பசவராஜ் பொம்மையை, அவரது வீட்டில் சந்தித்து பேசி இருந்தார். இதையடுத்து, நேற்று காலை 11.30 மணியளவில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சென்றார். அங்கு அவர் எடியூரப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 2 பேரும் அரை மணிநேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டு இருந்தார்கள்.

டெல்லி செல்ல முடிவு

  குறிப்பாக இலாகா ஒதுக்கீடு செய்ததில் மந்திரி ஆனந்த்சிங் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருவதால், அவரை சமாதானப்படுத்த அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடியூரப்பாவுடன் பசவராஜ் பொம்மை ஆலோசித்ததாக தெரிகிறது. தற்சமயம் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் சிலர் அதிருப்தியில் இருந்து வருவதால், அதுகுறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க, அடுத்த வாரம் டெல்லிக்கு செல்வது குறித்து எடியூரப்பாவிடம் பசவராஜ் பொம்மை ஆலோசித்து முக்கிய முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

  மேலும் அடுத்த வாரம் மேலிட பொறுப்பாளர் அருண் சிங் பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் இலாகா ஒதுக்கீடு செய்ததில் மந்திரிகள் ஆனந்த்சிங், எம்.டி.பி.நாகராஜ், ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் அதிருப்தியில் இருப்பது குறித்து அருண்சிங் கவனத்திற்கு கொண்டு செல்வது குறித்தும் எடியூரப்பாவுடன் பசவராஜ் பொம்மை ஆலோசித்துள்ளார். எடியூரப்பாவின் ஆலோசனைகளை பெற்றுவிட்டு, அங்கிருந்து பசவராஜ் பொம்மை புறப்பட்டு சென்றார்.

Next Story