கர்நாடகத்தில் திட்டமிட்டபடி 23-ந்தேதி பள்ளிகள் திறப்பு; பசவராஜ் பொம்மை அறிவிப்பு


கர்நாடகத்தில் திட்டமிட்டபடி 23-ந்தேதி பள்ளிகள் திறப்பு; பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2021 2:38 AM IST (Updated: 15 Aug 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை வருகிற 23-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி என நிபுணர்களுடன் ஆலோசித்த பின்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பசவராஜ் பொம்மை ஆலோசனை

  பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்தும், 3-வது அலையை தடுப்பது குறித்தும் நிபுணர்கள் குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மந்திரிகள் சுதாகர், அஸ்வத் நாராயண் கலந்து கொண்டனர்.

  ஆலோசனை கூட்டத்தில் தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக இல்லாததால், ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளை தொடருவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி முதல்-மநதிரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

3-வது அலை இல்லை

  மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் குழுவினர், மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா நிலவரம், அண்டை மாநிலங்களான கேரளா, மராட்டியத்தில் உள்ள நிலைமை ஆகியவை பற்றி தெளிவாக நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. அவர்கள் தங்களது அனுபவம், கொரோனா பரவல் எந்த மாதிரியாக இருக்கும் என்பதை அரசிடம் தெரிவித்துள்ளனர்.

  மாநிலத்தில் கொரோனா 3-வது அலை இன்னும் உருவாகவில்லை. தற்போது கொரோனா 2-வது அலை தான் இருக்கிறது. முதல் அலை முடிவுக்கு வந்தபோது 300 பேருக்கு மட்டுமே தினசரி பாதிப்பு ஏற்பட்டது. தற்போது 1,400 முதல் 1,800 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் 2-வது அலை தான் மாநிலத்தில் இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அரசுக்கு நிபுணர்கள் குழுவினர் சில பரிந்துரைகளை வழங்கி உள்ளனர்.

23-ந் தேதி பள்ளிகள் திறப்பு

  இந்த கூட்டத்தில் குறிப்பாக பள்ளிகளை திறப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்திருப்பதால் பள்ளிகளை திறக்க நிபுணர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். அதன்படி, மாநிலத்தில் வருகிற 23-ந் தேதி முதல் திட்டமிட்டபடி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவது உறுதி. கொரோனா பாதிப்பு 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறந்தாலும், அதற்காக தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

  அதனை ஒவ்வொரு பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும். ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். பெற்றோரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டியது அவசியம். ஒரு வேலை பள்ளிகள் திறந்த பின்பு, அங்கு கொரோனா பாதிப்பு அதிகமானால், ஒரு வாரம் உடனடியாக பள்ளிகளை மூட வேண்டும். பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த பின்பே பள்ளிகளை திறக்க அனுமதிக்கப்படும்.

பரிசோதனையை அதிகரிக்க...

  அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு 2 சதவீதத்திற்கு மேல் இருக்கும் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. அந்த மாவட்டங்களில் உள்ள தாலுகாக்களில் குறைவான பாதிப்பு இருந்தால், அதுபற்றி தினமும் அறிந்து கொண்டு, அந்தந்த தாலுகாக்களில் பள்ளிகள் திறக்க மாவட்ட கலெக்டர்கள் அனுமதி அளிப்பார்கள். நிபுணர்கள் ஆலோசனையின் பேரிலேயே மாநிலத்தில் பள்ளிகளை திறக்க அரசு தீர்மானித்துள்ளது.

  மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள குடகு, தட்சிண கன்னடா, சிக்கமகளூரு, துமகூரு, ஹாசன், உடுப்பி, பெங்களூரு புறநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரிசோதனையை அதிகரிக்கவும், தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மராட்டியம், கேரள மாநில எல்லை பகுதிகளில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோதனை நடத்தவும், அங்கு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன்.

6 புதிய ஆய்வு மையங்கள்

  டெல்டா வைரஸ் பற்றி தற்போது நிமான்ஸ் உள்பட 4 மையங்களில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆய்வு அறிக்கை கிடைக்கவும் 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. எனவே கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் இருந்து பெறப்படும் சளி மாதிரி குறித்து ஆய்வு செய்ய பெங்களூரு, மைசூரு, சிவமொக்கா உள்ளிட்ட 6 மாவட்டங்களில், புதிதாக 6 ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். இன்னும் 15 நாட்களுக்குள் அந்த 6 ஆய்வு மையங்களும் திறக்கப்பட உள்ளது.

  இதன்மூலம் டெல்டா வைரசை எளிதில் கண்டுபிடித்து, 3-வது அலை உருவாகாமல் தடுக்க முடிவும். மாநிலத்தில் தற்போது 4 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசிடம் 14 லட்சத்து 89 ஆயிரம் தடுப்பூசி இருப்பு உள்ளது. இன்னும் 3 லட்சம் தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் மத்திய அரசிடம் இருந்து வர இருக்கிறது. கூடிய விரைவில் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து மாநிலத்தில் கூடுதல் தடுப்பூசி வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்படும்.

ஊரடங்கு இல்லை

  பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், அதுதொடா்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கவும் மாநகராட்சி கமிஷனருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவமனைகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அதன்படி, பெங்களூருவில் தினமும் கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுப்பார். பெங்களூருவில் தற்போது 0.75 சதவீதம் என்ற அடிப்படையிலேயே கொரோனா பாதிப்பு உள்ளது.

  2 சதவீதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே பெங்களூருவில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும். மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகம் இல்லாததால், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், உத்தரவுகளே இன்னும் 2 வாரங்கள் தொடரும். திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும். ஊரடங்கோ, வார இறுதி நாட்களில் ஊரடங்கோ அமல்படுத்தப்படாது. அந்தந்த மாவட்டங்களில் கொரோனா பரவலுக்கு ஏற்ப மாவட்ட கலெக்டர்களே கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே கட்டுப்பாடுகளை விதிக்க சாத்தியமில்லை.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story