தடையை மீறி வாரச்சந்தைக்கு ஆடுகளை கொண்டு வந்த விவசாயிகள்
கொங்கணாபுரத்தில் தடையை மீறி வாரச்சந்தைக்கு ஆடுகளை கொண்டு வந்த விவசாயிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
எடப்பாடி, ஆக.15-
கொங்கணாபுரத்தில் தடையை மீறி வாரச்சந்தைக்கு ஆடுகளை கொண்டு வந்த விவசாயிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
வாரச்சந்தை
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை பிரபலமாகும். இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கால்நடை வளர்ப்போர், விவசாயிகளின் தங்களின் வளர்ப்பு ஆடுகள், கோழிகள் மற்றும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு அதிகமாக மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு தடை விதித்து சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், கொங்கணாபுரம் வாரச்சந்தை கடந்த மாதம் 31-ந் தேதி முதல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நேற்றும் (சனிக்கிழமை) தொடர்ந்்தது. இருப்பினும் ஆடி மாதம் கடைசி வாரம் என்பதால் ஆடு,கோழிகளை விற்பனை செய்ய நேற்று விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும், தங்கள் கால்நடைகளுடன் வாரச்சந்தைக்கு திரண்டு வந்தனர். குறிப்பாக வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்து 500 ஆடுகள், 1000 சேவல், கோழிகள், 50 டன் காய்கறிகள் கொண்டு வந்திருந்தனர். கொங்கணாபுரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் தடை உத்தரவு உள்ளதால் அனுமதிக்க மறுத்தனர். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும், வெள்ளயம்பாளையம், தங்காயூர், எட்டிகுட்டைமேடு, கோரணம்பட்டி பகுதி சாலையில் ஆடு, கோழி, காய்கறிகளை விற்பனை செய்தனர்.
எச்சரித்து அனுப்பினர்
இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் வாரச்சந்தைக்கு கால்நடைகள், காய்கறிகளுடன் வந்த விவசாயிகளை எச்சரித்து அனுப்பினர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது,‘தற்போது ஆடி மாதம் அம்மன் கோவில்கள், குலதெய்வ வழிபாடுகளிலும் பக்தர்கள் ஆடு, சேவல்கள் பலியிட்டு வழிபடுவார்கள். இதனால் ஆடு, சேவல், கோழிகள் மற்றும் காய்கறிகளையும் விற்பனைக்கு கொண்டு வந்தோம். ஆடி மாதம் கடைசி வாரம் என்பதால் பொதுமக்கள் ஆடு,கோழிகளை வாங்கி செல்கின்றனர். தடை என்பதால் சந்தையில் விற்பனை செய்யாமல் கொண்டு வந்ததை அருகிலுள்ள வெளியிடங்களில் விலை மிக குறைவாக விற்பனை செய்கின்றோம்’ என்றார்கள்.
Related Tags :
Next Story