பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் ரெயில் பெட்டிகளாக மாறிய வகுப்பறைகள்
பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் உள்ள வகுப்பறைகள் ரெயில் பெட்டிகளாக மாற்றப்பட்டு உள்ளன. மேலும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பது தள்ளி போகிறது. இருப்பினும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன. கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது.
இதற்கிடையில் பள்ளியில் உள்ள வகுப்பறைகளை ரெயில் பெட்டிகளாக மாற்றப்பட்டு உள்ளன. அந்த அளவுக்கு வகுப்பறை சுவரில் தத்ரூபமாக வர்ணம் தீட்டப்பட்டு உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, தமிழாசிரியர் பாலமுருகன் ஆகியோர் தங்களது சொந்த செலவில் சுவரில் ரெயில் பெட்டிகளை வரைந்து உள்ளனர். இதுகுறித்து பள்ளி தமிழாசிரியர் கூறியதாவது:-
கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் குழந்தைகள் வீட்டில் உள்ளனர். செல்போன் இருப்பவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்கின்றனர். இல்லையெனில் விளையாடுவது மற்றும் குழந்தை தொழிலாளர்களாக மாறி வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
இதன் காரணமாக பள்ளிகள் திறக்கும் போது குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வகுப்பறைகள் இருக்க வேண்டும். இதற்காக 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் 7 வகுப்பறைகளில் ரெயில் பெட்டிகளை போன்று வர்ணம் தீட்டப்பட்டு உள்ளது.
இதற்காக ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது. குழந்தைகளுக்கு பொதுவாக ரெயில் என்றால் மிகவும் பிடிக்கும். இதற்காக ரெயில் பெட்டிக்குள் இருந்து பாடம் படிக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளோம். மேலும் ரெயில் பெட்டியில் கோவை, பொள்ளாச்சி ஊர் பெயர்கள் மட்டுமல்லாது பள்ளிக்கு வரும் குழந்தைகளின் ஊர் பெயர்களையும் எழுதி உள்ளோம். பள்ளியில் கல்வியை மட்டும் கற்பிக்காமல், சமூக அக்கறை கொண்ட செயல்பாடுகளும் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பள்ளியில் செயல்பாடுகளை பாடலாக பாடி யூடிப்பில் வீடியோ பதிவேற்றம் செய்து இருந்தோம். இதன் காரணமாக கடந்த ஆண்டை விட மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு 143 பேர் மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு 156 பேர் பள்ளியில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மற்ற அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 43 பேர் புதிதாக வந்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story