திருமழிசை பகுதிகளில் முக கவசம் அணியாத கடைக்காரர்கள், பொதுமக்களுக்கு அபராதம்


திருமழிசை பகுதிகளில் முக கவசம் அணியாத கடைக்காரர்கள், பொதுமக்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 15 Aug 2021 7:47 AM GMT (Updated: 15 Aug 2021 7:47 AM GMT)

திருமழிசை பகுதிகளில் பேரூராட்சி உதவி இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணியாத கடைக்காரர்கள், பொதுமக்களுக்கு அபராதம் விதித்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி கடைப்பகுதிகளில் கொரோனா விதிமுறையை மீறி பொதுமக்கள், வியாபாரிகள் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்கள் வாங்கி வருவதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், நேற்று மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் திருவள்ளூரை அடுத்த திருமழிசை பகுதியில் உள்ள பழக்கடை, பூக்கடை, காய்கறி கடை, பேக்கரி, ஓட்டல்கள், டீக்கடை என சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நேரடியாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அபராதம்

அப்போது பெரும்பாலான கடைக்காரர்கள் மற்றும் கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் முக கவசம் அணியாமல், உரிய சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் இருந்ததை கண்டு கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து பேரூராட்சி அதிகாரிகள் முக கவசம் அணியாதது, உரிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வந்தவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 800 அபராதம் விதித்தனர்.

மேலும் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன் பொதுமக்கள், கடைக்காரர்கள், வாகன ஓட்டிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பின்னர் துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவருடன் திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் ரவி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

பள்ளிப்பட்டு

அதைத்தொடர்ந்து, முன்னதாக பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் புதிய உதவி இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள், அலுவலக பதிவேடுகள் ஆகியவற்றை சரிபார்த்தார்.

திட்டப் பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள், பொது கழிப்பிட பராமரிப்புகள் ஆகியவற்றை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பிறகு பேரூராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களின் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அவர் கேட்டறிந்தார். மேலும், பள்ளிப்பட்டு பேரூராட்சியில் பஜார் தெருவிற்கு சென்று பார்வையிட்டு கடைகளில் முக கவசம் அணியாத வியாபாரிகளுக்கும், பொதுமக்களையும் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தினார்.

Next Story