தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் மேலும் ஒரு பெட்டக முனையம் அமைக்க நடவடிக்கை பொறுப்புக்கழகதலைவர் ராமச்சந்திரன் தகவல்


தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில்  மேலும் ஒரு பெட்டக முனையம் அமைக்க நடவடிக்கை  பொறுப்புக்கழகதலைவர் ராமச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 15 Aug 2021 6:24 PM IST (Updated: 15 Aug 2021 6:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.434 கோடி செலவில் மேலும் சரக்கு பெட்டக முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.434 கோடி செலவில் மேலும் சரக்கு பெட்டக முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
சுதந்திர தின விழா
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சார்பில் சுதந்திர தினவிழா வ.உ.சி. துறைமுக பள்ளி வளாகத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றிக் கொண்டார். தொடர்ந்து அவர் விழாவில் பேசியதாவது:-
பலரது தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை பேணி காத்து நாட்டை வளம்பெற செய்வது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமை. இந்தியா நல்லரசாகவும், வல்லரசாகவும் திகழ நமது பங்களிப்பை தொடர்ந்து அளிக்க வேண்டும். நாம் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வருகிறோம். கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதில் இந்திய அரசு பல வலுவான திட்டங்களை தீட்டி சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
வளர்ச்சி
இந்திய அரசு துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக கடற்சார் தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக சாகர்மாலா என்ற திட்டத்தை 2015 முதல் 2035 வரை ரூ.6 லட்சம் கோடி முதலீட்டில் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் 574-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம்2015-16ம் நிதியாண்டில் சுமார்965.36 மில்லியன் டன்களாக இருந்த பெருந்துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன்2019-20-ம் நிதியாண்டில் 1550 மில்லியன் டன்களாக உயர்ந்து உள்ளது.
தற்போது உலகம் எங்கும் நிலவி வரும் கொரோனா தொற்றின் தாக்கத்தால் ஏற்பட்டு உள்ள பொருளாதார மந்தநிலையால் குறைந்து உள்ள வாணிபம், அதிகரித்து உள்ள கப்பல் கட்டணம், சரக்கு பெட்டகங்களின் தட்டுப்பாடு ஆகிய சரக்கு பெட்டகங்களின் தட்டுப்பாடு போன்ற சூழ்நிலையிலும் கடந்த ஜூலை மாதம் வரை இந்திய பெருந்துறைமுகங்கள் 21.71 சதவீதம் வளர்ச்சி கண்டு உள்ளது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் இந்த நிதியாண்டில் ஜூலை மாதம் வரை11.33 மில்லியன் டன் சரக்குகளையும், 2.68 லட்சம் சரக்கு பெட்டகங்களையும் கையாண்டு, கடந்த நிதியாண்டை விட 7.14 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது. இதில் 1400 காற்றாலை இறகுகள் மற்றும் கோபுரங்களை கையாண்டு சாதனை படைத்து உள்ளது. மேலும் ஏற்றுமதிக்கு தயாராக உள்ள காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை துறைமுகத்தில் சேமித்து வைப்பதற்காக சுமார் 7 ஆயிரத்து 500 சதுர மீட்டர் நிலப்பரப்பு விரைவில் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதியை அதிகரிக்க வணிக மேம்பாட்டு சபை உருவாக்கப்பட்டு உள்ளது.
சரக்கு பெட்டக முனையம்
வ.உ.சி. துறைமுகத்தின் 9-வது கப்பல் தளம் ரூ.434.17 கோடி செவில் 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்ட சரக்கு பெட்டக முனையமாக மாற்றப்பட உள்ளது. துறைமுகத்தில் பெரிய கப்பல்களில் சரக்கு கையாளுவதற்கு வசதியாக துறைமுகத்தில் கப்பலின் நுழைவு வாயில் தற்போது உ்ள 153 மீட்டரில் இருந்து 230 மீட்டர் அகலம் கொண்டதாக மாற்றப்பட உள்ளது. வடக்கு சரக்கு தளம்-3, ரூ.403 கோடி செலவில் ஆண்டுக்கு 6.96 மில்லியன் டன் சரக்கை கையாளும் திறன் கொண்ட கப்பல் தளமாக மாற்றப்படுகிறது.துறைமுகத்தின் சரக்குதளம் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய பொதுசரக்கு கப்பல் தளங்களை 840 மீட்டர் நீளம் மற்றும் 15.50 மீட்டர் மிதவைஆழம் கொண்ட சர்வதேச சரக்குபெட்டக முனையமாக மாற்றுவதன்மூலம் இந்த தளங்களில் 1.6 மில்லியன் சரக்கு பெட்டகங்கள்அதிகமாக கையாள வழிவகுக்கும். மேலும், கப்பல் சரக்குதளம் 5, 6மற்றும் 10 ஆகிய தளங்களை பலப்படுத்தி, ஆண்டுக்கு 21 மில்லியன்டன்கள் பொதுசரக்குகளை கையாளும் தளங்களாகமாற்றியமைக்கப்படும். இந்த திட்டங்கள் முடியும் போது, ஆண்டுக்கு 41 மில்லியன் சரக்கு பெட்டகங்கள் கையாளக்கூடிய 2 சரக்கு பெட்டக முனையங்கள் வெளித்துறைமுகத்தில் அமைக்கப்படும்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 140 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரியமின் சக்திஆலை நிறுவும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. கூடுதலாக270 கிலோவாட் மேற்கூரை சூரியமின் சக்தி ஆலை துறைமுகத்தின் பல்வேறுஇடங்களில் நிறுவப்பட உள்ளது. வ.உ.சி. துறைமுகத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைவதற்கு ஒதுக்கி உள்ளது. மேலும் இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வ.உ.சி. துறைமுகம் மூலம் சுமார் 1650 மாலுமிகள் கப்பலில் ஏற்றப்பட்டு உள்ளனர். 1600 மாலுமிகள் கப்பலில் இருந்து பணி முடிந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து வ.உ.சி.துறைமுகத்தின் மருத்துவ துறையினர் 2 ஆயிரத்து 664 பேருக்கு கொரோனாதடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் பிமல்குமார் ஜா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story