கோவில்பட்டி கோவிலில் கொள்ளை முயற்சி
கோவில்பட்டி கோவிலில் கொள்ளை முயற்சி நடந்தது
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதர் சுவாமி கோவிலுடன் இணைந்த பூமிதேவி - நீலாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பூஜைகள் முடித்து அர்ச்சகர் வரதராஜன் மற்றும் பணியாளர்கள் கோவில் நடை சாத்தி விட்டு வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் கோவிலில் இருந்த பாதுகாப்பு அலாரம் ஒலித்தது. இதனால் கோவிலின் இரவுக் காவலர்கள் மற்றும் அக்ரஹார பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து அனைவரும் கோவில் முன் திரண்டனர்.
உடனடியாக கோவில் நடை திறக்கப்பட்டு பணியாளர்கள் சென்று பார்த்தனர். அப்போது மூலவர் சன்னதியின் இரண்டு கதவுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தன. வலது பின்புற பிரகாரத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு மேல் பகுதியில் கயிறு ஒன்று கிடந்தது. அதனுடன் ஒரு கடப்பாரை, ஸ்க்ரூ டிரைவர் ஆகியவையும் கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கோவிலுக்கு சென்று பார்வை யிட்டு, விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் கோவிலின் பின்புறம் உள்ள பகுதி வழியாக கயிறு கட்டி மேலே ஏறி, உள்ளுக்குள் நுழைந்துள்ளனர். பூட்டை உடைத்தபோது அலாரம் ஒலித்ததால் அவர்கள் மீண்டும் அதே வழியாக தப்பியதும் தெரியவந்தது. இந்த கொள்ளை முயற்சியில் 3 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. தடய அறிவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் மற்றும் சுற்று பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story