பஸ் பயணிக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு
பஸ் பயணிக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேனி:
போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்காக அரசு பஸ்சில் பயணம் செய்தார். ஆனால், இந்த பஸ் புதிய பஸ் நிலையம் செல்லாமல் பழைய பஸ் நிலையம் நோக்கி சென்றது. இதுகுறித்து அவர் கண்டக்டரிடம் கேட்டபோது, தங்களின் பணி நேரம் முடிந்து பஸ்சை பணிமனைக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். மேலும், புதிய பஸ் நிலையம் செல்லாது என்று கூறி அவரை அங்குள்ள சிக்னல் பகுதியில் இறக்கி விட்டுள்ளார். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் தொலைபேசி மூலம் ராமகிருஷ்ணன் புகார் செய்தார். பின்னர் இதுகுறித்து சென்னை போக்குவரத்து கழக ஆணையருக்கு புகார் மனு அனுப்பினார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க மதுரை நிர்வாக இயக்குனர் அலுவலகத்துக்கு ஆணையர் பரிந்துரை செய்தார்.
இந்நிலையில், தனது புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மதுரை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் அலுவலக பொது தகவல் அலுவலருக்கு, ராமகிருஷ்ணன் மனு அனுப்பினார். ஆனால், அவர் கேட்ட விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதனால், அவர் மேல்முறையீட்டு அலுவலருக்கு மனு அனுப்பினார். பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு அவர் மனு அனுப்பினார். இதன் மீது மாநில தகவல் ஆணையர் தமிழ்குமார் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், "மனுதாரருக்கு 4 ஆண்டுகளாக அவர் கேட்ட தகவல்களை கொடுக்காமல் மன உளைச்சல் ஏற்பட காரணமான அப்போதைய பொது தகவல் அலுவலரின் சம்பளத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் பிடித்தம் செய்து அதனை மனுதாரர் ராமகிருஷ்ணனுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அவர் கேட்ட தகவல்களை அவருக்கு வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story