சுதந்திர தினவிழாவில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்
திண்டுக்கல்லில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் விசாகன் தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகியின் வீட்டுக்கு கலெக்டர் நேரில் சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார்.
திண்டுக்கல்:
சுதந்திர தினவிழா
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் விசாகன், காலை 9.05 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
அதையடுத்து சமாதானத்தின் அடையாளமாக வெண் புறாக்களையும், மூவர்ண நிறத்திலான பலூன்களையும் கலெக்டர் பறக்கவிட்டார். அதைத்தொடர்ந்து ஆயுதப்படை போலீசார், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், துணை சூப்பிரண்டு சுகுமாறன் உள்பட 33 போலீசாருக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
சான்றிதழ்கள்
அதையடுத்து கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) பூங்கோதை உள்பட 179 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்களை கலெக்டர் வழங்கினார். முன்னதாக சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. அதேபோல் சுதந்திர போராட்ட தியாகிகளும் விழாவுக்கு அழைத்துவரப்படவில்லை.
மாறாக அவர்களின் வீடுகளுக்கு அந்தந்த பகுதிகளை சேர்ந்த தாசில்தார்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து கவுரவித்தனர். ஆத்தூர் தாலுகா சின்னாளப்பட்டியில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகி பூலூர் செட்டியாரின் வீட்டுக்கு கலெக்டர் நேரில் சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார்.
காந்தி சிலைக்கு மாலை
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அங்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சப்-கலெக்டர் தினேஷ்குமார், திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதேபோல் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி ஜமுனா தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதையடுத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன், சிறப்பு நீதிபதி ஜான்மினோ, கூடுதல் சார்பு நீதிபதி ராமச்சந்திரன் உள்ளிட்ட நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
ரெயில் நிலையம்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது குலாம் தஸ்தாகிர், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில்குமார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்து முன்னணி சார்பில் 108 விநாயகர் கோவில் அருகே சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்கு மதுரை கோட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜா சிறப்புரையாற்றினார். பின்னர் சுதந்திர போராட்ட வீரர் விருப்பாட்சி கோபால்நாயக்கரின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் பா.ஜ.க. சார்பில் நடந்த சுதந்திர தினவிழாவுக்கு முன்னாள் நகர தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், பொதுமேலாளர் கணேசன் தேசியக்கொடியை ஏற்றினார்.
அதன் பின்னர் சிறப்பாக பணியாற்றிய டிரைவர், கண்டக்டர்கள் உள்பட 32 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. அதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பஸ் பணிமனைகளிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
Related Tags :
Next Story