குடிநீர் கேட்டு என்.எல்.சி. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை பெண்கள் உள்பட 80 பேர் மீது வழக்குப்பதிவு
குடிநீர் கேட்டு என்.எல்.சி. சுரங்கம் 2 அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 80 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மந்தாரக்குப்பம்,
ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வறண்டன
நெய்வேலி அருகே வடக்கு வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சுற்றியும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி குடியிருப்புகளில் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வறண்டது. ஒரு சில ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் கலங்கிய நிலையில் வந்தது. இதனை குடிக்கும் மக்களுக்கு தோல் நோய், வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட வடக்கு வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட தொல்காப்பியர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, அருந்ததியர் தெரு, ஓம் சக்தி நகர் ஆகிய பகுதி மக்கள் தங்களுக்கு சுகாதாரமான குடிநீரை என்.எல்.சி. நிர்வாகம் தினந்தோறும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று என்.எல்.சி. நிர்வாகம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தது.
என்.எல்.சி. அலுவலகம் முற்றுகை
அதன்பிறகு கடந்த 10 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் என்.எல்.சி. நிறுவனத்திடம் குடிநீர் கேட்டு கோரிக்கை வைத்தனர். ஆனால் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று குடிநீர் கேட்டு என்.எல்.சி. 2-வது சுரங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வக்கீல் திருமாறன் தலைமையில் நேற்று காலை கலைமகள் பஸ் நிறுத்தத்தில் இருந்த ஊர்வலமாக சென்று 2-வது சுரங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும் மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி, நிலக்கரி சுரங்கம் 2 மனித வளத்துறை அதிகாரி ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இன்று (அதாவது நேற்று) தங்களது பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் எனவும், மேலும் இந்த பிரச்சினை குறித்து உயர்அதிகாரிகளுடன் நாளை திங்கட்கிழமை (அதாவது இன்று) விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேசி நிரந்தர தீர்வு காணலாம் என கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி கூட்டமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டதாக 50 பெண்கள் உள்பட 80 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story