திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்கு அனைத்து கடைகளும் அடைப்பு


திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் 10 நாட்களுக்கு மாலை 5  மணிக்கு  அனைத்து கடைகளும் அடைப்பு
x
தினத்தந்தி 15 Aug 2021 11:51 PM IST (Updated: 15 Aug 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது. 

இருப்பினும் கடந்த சில நாட்களில் நோய் தொற்று எண்ணிக்கை மற்றும் சதவீதம் சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் தற்பொது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் கூடுதலாக கடைபிடித்தல் குறித்து நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம். உணவக உரிமையாளர்கள் சங்கம். பூக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து சங்க பிரதநிதிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. 

கடைகள் அடைப்பு

இந்த கூட்டத்தின் முடிவில் திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் மட்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) வரை 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி மற்றும் அரசின் இதர வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி அமர்ந்து உணவருந்தவும், தேநீர் சாப்பிடவும் அனுமதிக்கபடுவார்கள். மாலை 5 மணிக்கு மேல் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும்.

முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

 கடை, உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். ஆய்வின் போது கடை, உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முக கவசம் அணியாதது மற்றும் தடுப்பூசி போடாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதுடன் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மிகக்கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். 

பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள், மளிகை கடை நடத்துபவர்கள், உணவகம் நடத்துபவர்கள், சிறு விவசாயிகள், சாலை ஓரம் கடை வைத்துள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story