3 கோவில்களில் புதிய அர்ச்சகர்கள் பொறுப்பு ஏற்பு
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 3 கோவில்களில் புதிய அர்ச்சகர்கள் பொறுப்பு ஏற்று கொண்டனர்.
வத்திராயிருப்பு,
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 3 கோவில்களில் புதிய அர்ச்சகர்கள் பொறுப்பு ஏற்று கொண்டனர்.
வத்திராயிருப்பு
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையடுத்து முதற்கட்டமாக 58 பேருக்கு பணி நியமன ஆணையை தமிழக அரசு வழங்கியது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். அதன்படி வத்திராயிருப்பில் உள்ள சேது நாராயண பெருமாள் கோவிலில் கண்ணபிரான் (வயது 45) என்பவர் புதிய அர்ச்சகராக பொறுப்பு ஏற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 2006-2007-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் அர்ச்சகர் படிப்பு முடித்தேன். இந்தநிலையில் தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் தற்போது அர்ச்சகராக பொறுப்பேற்று உள்ளேன். இதற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சாத்தூர்
சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் நிர்வாக அதிகாரி தனலட்சுமி முன்னிலையில் கோவில்பட்டியை சேர்ந்த சீனிவாசன் புதிய அர்ச்சகராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் கடந்த 2007-2008-ம் ஆண்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள வேதாகம பயிற்சி பள்ளியில் ஒரு ஆண்டு அர்ச்சகர் பட்டயப்படிப்பு முடித்துள்ளேன். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக புதூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்தேன். இந்தநிலையில் தமிழக அரசு அறிவித்த அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் எனக்கு சாத்தூரில் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் பணி ஆணை வழங்கப்பட்டது. அதன்படி அர்ச்சகர் பணியினை தொடங்கியுள்ளேன். தமிழக அரசு எனக்கு கொடுத்த இந்த நல்வாய்ப்பை நான் கடவுள் அருளிய பணியாக செய்து வருவேன் என்றார்.
தளவாய்புரம்
சேத்தூர் அருகே உள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட நாகமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறிய மலை மேல் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் அர்ச்சகராக கரிவலம் வந்த நல்லூர் பகுதியை சேர்ந்த வண்ணமுத்து (43) என்பவர் தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது கோவிலின் செயல் அலுவலர் மகேந்திரன், பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story