தடுப்பணையில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் பலி
ஓமலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் பலியானார்.
ஓமலூர், ஆக.16-
ஓமலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி பாலிடெக்னிக் மாணவர் பலியானார்.
பாலிடெக்னிக் மாணவர்
சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் சுபாஷ் (வயது 18). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரும், அதே பகுதியை ேசர்ந்த பாலிடெக்னிக் மாணவர்களான பாருக் (18), பரணி (18) மற்றும் 10-ம் வகுப்பு மாணவரான கவுதம் (17) ஆகியோர் நண்பர்கள் ஆவார்கள்.
நேற்று அவர்கள் 4 பேரும், சேலத்தில் இருந்து ஓமலூர் அருகே உள்ள சக்கரை செட்டிப்பட்டி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அங்கு குரமச்சங்கரடு பகுதியில் அமைந்துள்ள தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றனர்.
தடுப்பணையில் மூழ்கி பலி
அப்போது சுபாஷ் என்ற மாணவர் முதலில் தண்ணீரில் இறங்கி குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளார்.
இதை பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போடவே அருகில் இருந்த வாலிபர்கள் தண்ணீரில் குதித்து மாணவர் சுபாஷை மீட்டுள்ளனர். ஆனால் மாணவர் சுபாஷ் மயக்கம் அடைந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சுபாசை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.
வனத்துறையினர் விசாரணை
இந்த சம்பவம் குறித்து சேலம் தெற்கு வனச்சரக வனக்காப்பாளர் செல்வசேகரன் மற்றும் வனக்காவலர் நந்தினி ஆகியோர் ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் போலீசார் மாணவன் சுபாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதே நேரத்தில் சம்பவ இடம் வனப்பகுதி என்பதால் சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன், தெற்கு வனச்சரகர் சின்னதம்பி ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story