நாகர்கோவிலில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்
நாகர்கோவிலில் நேற்று எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். விழாவில் சிறப்பாக பணியாற்றிய 236 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் நேற்று எளிமையாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். விழாவில் சிறப்பாக பணியாற்றிய 236 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சுதந்திர தினவிழா
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தின விழா நடந்தது.
விழாவில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு போலீசாரின் கம்பீரமான அணிவகுப்பு தொடங்கியது. இந்த அணிவகுப்பை கலெக்டர் அரவிந்த் திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக ஜீப்பில் பழுது ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை கலெக்டர் அரவிந்த் நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனும் உடன் இருந்தார். பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் மூவர்ண பலூன்களை கலெக்டர் அரவிந்த் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் வானில் பறக்கவிட்டனர்.
சான்றிதழ்
இதைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு சான்றிதழை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். அந்த வகையில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, விளையாட்டுத்துறை, கருவூலத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்பட பல்வேறு துறைகளில் பணிபுரிந்த 72 நபர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. செய்தி மக்கள் தொடர்புத்துறையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட், உதவி அலுவலர் செல்வலெட் சுஷ்மா மற்றும் புகைப்பட கலைஞர் அசோக்குமார் ஆகியோருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
போஷன் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த களப்பணி விருது 3 நபர்களுக்கும், சென்னை குடும்ப நல இயக்குனரகத்தால் மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 12 நபர்களுக்கு நற்சான்றிதழும், பிரதான் மந்திரி ஜான் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்ரீ மூகாம்பிகா தனியார் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றிற்கு விருதுகளையும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் 20 ஆண்டுகள் விபத்துகளின்றி பணிபுரிந்த ஓட்டுனர்கள் 2 நபர்களுக்கு தங்க பதக்கமும், 10 ஆண்டுகள் விபத்துகளின்றி பணிபுரிந்த 2 ஓட்டுனர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள சிறுசேமிப்பு பத்திரமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேசிய விளையாட்டுகளில் கலந்து கொண்டு முதல் மற்றும் 3-ம் இடங்களை வென்று பதக்கம் பெற்ற 12 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழும், காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 34 அலுவலர்களுக்கு வெகுமதியையும் கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
236 பேருக்கு பாராட்டு
மேலும் 2021 கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பறக்கும் படையினர்கள், தாசில்தார்கள் உள்பட 97 நபர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களும் வழங்கப்பட்டன.
அந்த வகையில் மொத்தம் 236 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
குடும்பத்துடன் கலெக்டர்...
இந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் அரவிந்த், தன்னுடைய மனைவி கிருத்திகா மற்றும் மகன் சிபிஸ், மகள் மகிமா ஆகியோருடன் கலந்து கொண்டார்.
இதே போல போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தன் மனைவி அஸ்வினியுடன் கலந்து கொண்டார். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன், விஜய்வசந்த் எம்.பி., திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா பரவல் காரணமாக அணிவகுப்பில் குறைவான போலீசாரே கலந்து கொண்டனர். அதோடு ஊர்க்காவல் படை வீரர்களும், என்.சி.சி. மாணவர்களும் கலந்து கொள்ளவில்லை.
எனவே விழாவானது மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. சுதந்திர தின விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. விழா நிறைவடையும் வரை அந்த பகுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கொரோனா அச்சம் இன்னும் நீங்காததால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சுதந்திர தின விழா எளிமையாக நடந்தது. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவில்லை. விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. முன்னதாக நாகா்ேகாவில் மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையர் ஆஷா அஜித் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
Related Tags :
Next Story