200 அடி பள்ளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்தது
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் 200 அடி பள்ளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் பலியானார்.
கோத்தகிரி
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் 200 அடி பள்ளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர் பலியானார்.
வளைவில் திரும்ப முயற்சி
கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 55). டேங்கர் லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா(45). இவர்களுக்கு 22 வயதில் திருமணமாகாத மகள் உள்ளார்.
இந்தநிலையில் முருகானந்தம் நேற்று முன்தினம் இரவில் டேங்கர் லாரியில் டீசல் ஏற்றிக்கொண்டு கோவையில் இருந்து கோத்தகிரிக்கு வந்தார். பின்னர் டீசலை இறக்கிவிட்டு மீண்டும் கோவைக்கு திரும்பினார்.
இதையடுத்து இரவு 10.30 மணியளவில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள குறுகிய வளைவில் லாரியை திருப்ப முருகானந்தம் முயற்சித்தார்.
பள்ளத்தில் கவிழ்ந்து சாவு
அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, பக்கவாட்டில் இருந்த சுமார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைக்கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக கோத்தகிரி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்புசாமி மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பள்ளத்தில் இறங்கி டிரைவரை மீட்க முயன்றனர்.
அப்போது அங்குள்ள புதரில் தூக்கி வீசப்பட்டு முருகானந்தம் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story