தேசிய கொடியை ஏற்ற ஏற்பாடுகள் செய்த மாணவன் மின்சாரம் தாக்கி சாவு


தேசிய கொடியை ஏற்ற ஏற்பாடுகள் செய்த மாணவன் மின்சாரம் தாக்கி  சாவு
x
தினத்தந்தி 16 Aug 2021 2:37 AM IST (Updated: 16 Aug 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

துமகூரு அருகே தேசிய கொடியை ஏற்ற ஏற்பாடுகள் செய்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.

பெங்களூரு:

தேசிய கொடி ஏற்றுவதற்காக...

  துமகூரு மாவட்டம் கோரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கரீகெரா கிராமத்தை சேர்ந்தவர் சரிதா. இவரது மகன் சந்தன்(வயது 16). இவன், பள்ளி ஒன்றில் படித்து வந்தான். கரீகெரா கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் சந்தனின் நண்பர் பவன்(15) படித்து வருகிறான். நேற்று காலையில் சந்தன், பவன் மற்றும் சசாந்த்(22) ஆகியோர் அந்த தொடக்க பள்ளி முன்பாக சென்றார்கள்.

  அப்போது அரசு பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி நேற்று தேசிய கொடி ஏற்றுவதற்காக, ஆசிரியர்கள் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பள்ளியின் முன்பாக நின்று கொண்டு இருந்த பவன், சந்தன், சசாந்திடம் தேசிய கொடியை ஏற்றுவதற்காக பள்ளி வளாகத்தில் உயரமான இரும்பு கம்பியை நிலை நிறுத்தும்படி ஆசிரியர் கூறியுள்ளார்.

மாணவன் சாவு

  ஆசிரியர் கூறியபடி தேசிய கொடியை ஏற்றுவதற்காக இரும்பு கம்பியை நிலை நிறுத்தும் பணியில் 3 பேரும் ஈடுபட்டுள்ளனர். அநத இரும்பு கம்பியை 3 பேரும் சேர்ந்து தூக்கி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக சென்ற மின்சார வயரில் இரும்பு கம்பி உரசியதாக தெரிகிறது. இதனால் இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து சந்தன் தூக்கி வீசப்பட்டான். அதுபோல், மின்சாரம் தாக்கியதில் சசாந்த், பவனும் பலத்தகாயம் அடைந்தனர்.

  பின்னர் 3 பேரையும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அங்கிருந்தவர்கள் அனுமதித்தனர். அங்கு சந்தனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சசாந்த், பவனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களின் அலட்சியம்

  இதற்கிடையில், சந்தன் உயிர் இழந்ததை பற்றி அறிந்ததும், அவரது தாய் சரிதா பதறியபடி ஓடிவந்தார். தனது மகனின் உடலை பார்த்து அவர் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. தகவல் அறிந்ததும் கோரா போலீசார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றும், ஆஸ்பத்திரிக்கு சென்றும் விசாரணை நடத்தினார்கள். மேலும் சந்தனின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  போலீசார் நடத்திய விசாரணையில், தேசிய கொடி ஏற்றுவதற்காக ஏற்பாடுகளை செய்த போது மின்சாரம் தாக்கி சந்தன் உயிர் இழந்தது தெரிந்தது. மேலும் ஆசிரியர்களின் அலட்சியமே சந்தனின் சாவுக்கு காரணம் என்று கிராம மக்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். பள்ளி வழியாக மின்சார வயர்கள் செல்வது பற்றி அறிந்திருந்தும், மாணவர்களை இரும்பு கம்பியை நிலை நிறுத்தும்படி ஆசிரியர்கள் சொன்னதே சந்தனின் சாவுக்கு காரணம் என்று தெரியவந்தது.

பரபரப்பு

  சம்பவம் நடந்த அரசு தொடக்க பள்ளியில் தான் இதற்கு முன்பு சந்தன் படித்து வந்ததும், தற்போது அவன் வேறு பள்ளியில் படித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மாணவன் பலியான அரசு பள்ளிக்கு சென்று கல்வித்துறை அதிகாரி நரசப்பா விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் அலட்சியமாக இருந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், பலியான மாணவன் சந்தன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரி நரசப்பா தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து கோரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்த மாணவன் பலியான சம்பவம் துமகூருவில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story