நரபலி கொடுக்க போவதாக பெண்ணுக்கு மிரட்டல்
ஊர் நல்ல முறையில் இருக்க நரபலி கொடுக்க போவதாக மிரட்டல் விடுத்ததால் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பெண் ஒருவர் இன்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
திருவண்ணாமலை
ஊர் நல்ல முறையில் இருக்க நரபலி கொடுக்க போவதாக மிரட்டல் விடுத்ததால் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பெண் ஒருவர் இன்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
மனு பெட்டி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெறும். அப்போது மாவட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து குறைதீர்வு கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்திற்கு வாரந்தோறும் வருகின்றனர்.
மனுக்களை செலுத்த அலுவலக நுழைவு வாயில் அருகில் மனு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்தனர். அங்கிருந்த மனு பெட்டியில் மனுக்களை போட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர். பின்னர் பொதுமக்கள் அந்த பெட்டியில் மனுக்களை போட்டனர்.
நரபலி மிரட்டல்
கீழ்பென்னாத்தூர் தாலுகா எரும்பூண்டி கிராமம் தலைசெட்டிகுளம் குட்டார் என்பவரின் மனைவி முத்தி (வயது 53) என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் இறந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது. கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். கடந்த 9-ந் தேதி நான் கடம்பை கிராமத்தில் உள்ள உறவினர் இறந்து விட்டதால் அங்கு சென்றிருந்தேன். அப்போது எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர் சாமியாடி, முத்தி என்பவரை நரபலி கொடுக்க வேண்டும். அவளை வெட்டி நரபலி கொடுத்தால் இந்த ஊர் நல்ல முறையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
பின்னர் என்னை எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலர் தேடி எனது வீட்டிற்கு வந்தனர். அப்போது நான் அங்கு இல்லை. தகவலறிந்ததும் இது குறித்து கேட்டறிந்தேன். அதற்கு என்னை அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, சாமிக்கு நரபலி கொடுத்தாக வேண்டும் என்று தேடி வருகின்றனர்.
நான் தற்போது தலைமறைவாக உள்ளேன். இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story