வேலூரில் பால் கறக்கும் தொழிலாளி வெட்டிக்கொலை
வேலூர் கஸ்பா சுடுகாடு அருகே பால் கறக்கும் தொழிலாளி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
வேலூர்
வெட்டு காயங்களுடன் வாலிபர் உடல்
வேலூர் கஸ்பா சுடுகாட்டின் அருகே ஒரு வாலிபர் வெட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். இதனை நேற்று காலை அந்த வழியாக மாடு ஓட்டி சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை பார்வையிட்டனர்.
வாலிபரின் உடலின் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து, வெட்டு காயங்கள் காணப்பட்டன. இறந்த வாலிபர் குறித்து அந்த பகுதியில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர் குறித்து சரியான தகவல் கிடைக்கவில்லை. அதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இந்த கொலை குறித்து தகவலறிந்த வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். அதில், இறந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி காமராஜ் மகன் விக்னேஷ் (வயது 24) என்பதும், பால் கறக்கும் தொழில் செய்து வந்ததும், நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவரை மர்மநபர்கள் கத்தியால் குத்தியும், வெட்டியும் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். விக்னேஷ் செல்போனில் கடைசியாக பேசிய நபர்கள் குறித்தும், சுடுகாட்டின் அருகே உள்ள செல்போன் டவரில் இரவு நேரத்தில் பதிவாகியுள்ள செல்போன் எண்களை சேகரித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
3 பேரிடம் விசாரணை
இந்த கொலை குறித்து போலீசார் கூறுகையில், முன்விரோதம் காரணமாக விக்னேசை இரவு சுடுகாட்டின் அருகே வரவழைத்து மர்மநபர்கள் வெட்டி கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. அல்லது விக்னேஷ் மற்றும் நண்பர்கள் ஒன்றாக மதுஅருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.
முதற்கட்டமாக விக்னேஷ் நண்பர்கள் 3 பேரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story