விராலிமலையில் சுடுகாட்டில் பற்றி எரிந்த தீயால் பரபரப்பு மூச்சுத்திணறலால் வாகன ஓட்டிகள் அவதி


விராலிமலையில்  சுடுகாட்டில் பற்றி எரிந்த தீயால் பரபரப்பு  மூச்சுத்திணறலால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 16 Aug 2021 11:44 PM IST (Updated: 16 Aug 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

விராலிமலையில் சுடுகாட்டில் பற்றி எரிந்த தீயால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலால் அவதியடைந்தனர்.

விராலிமலை:
சுடுகாட்டில் சேர்ந்த குப்பைகள் 
விராலிமலையிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்லும் சாலை அருகே சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடானது தற்போது மனிதர்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. இங்கு விராலிமலை பகுதியில் சேறும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொட்டுவது வழக்கம். அதுமட்டுமின்றி அத்துமீறி விராலிமலை ஒன்றியத்தில் உள்ள தனியார் கம்பெனிகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை லாரியில் ஏற்றிவந்து சுடுகாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சுற்றுசுவரின் ஓரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர். மேலும் மனித கழிவுகளையும் இங்கு வந்து கொட்டிவிட்டு செல்வதால் சுடுகாட்டில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்புள்ளது.
கழிவுகளில் தீப்பற்றி எரிந்தது
இந்நிலையில் நேற்று அந்த சுடுகாட்டின் கிழக்குபகுதியில் உள்ள சுற்றுச்சுவரை ஒட்டி கிடந்த குப்பை கழிவுகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் சுமார் 10 அடிக்கும் மேல் பற்றி எறிந்த தீயால் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு கரும்புகை வந்தது.  இதனால் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலால் அவதியடைந்தனர்.
இதுகுறித்து அவ்வழியாக வந்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அங்கு வந்த இலுப்பூர் தீயனைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதுகுறித்து விராலிமலை ஒன்றிய கவுன்சிலர் மணி கூறுகையில், இனிவரும் நாட்களில் இதுபோன்ற கழிவுகளை கொட்டிச்செல்லும் வாகனங்களை கண்டறியும் பட்சத்தில் அந்த வாகனத்தை சிறைபிடித்து அதன் வாகன உரிமை மற்றும் தொழில் உரிமையை ரத்து செய்ய ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story