பேரிடர் ஒத்திகையில், தீயணைப்பு வீரர் மீது தீப்பிடித்ததால் பரபரப்பு
திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த பேரிடர் ஒத்திகையின்போது தீயணைப்பு வீரர் மீது தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி
பேரிடர் ஒத்திகை
திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பாக தென்மேற்குப் பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பேரிடரின்போது இன்னல்களிலிருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பான ஒத்திகை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு முன்னிலையில் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. திருச்சி தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் கருணாகரன் தலைமையிலான வீரர்கள் இந்த பேரிடர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
எங்கே பத்திரப்படுத்துவது...
அப்போது கலெக்டர் எஸ்.சிவராசு கூறுகையில், தென்மேற்கு பருவமழை வெள்ள எச்சரிக்கை வந்தவுடன் குடிநீர், ஈரப்பதம் இல்லா உணவு மற்றும் குழந்தைகளுக்கான உணவுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருட்களையும் மற்றும் ஆவணங்களையும் வீட்டின் உயரமான இடத்தில் வைக்க வேண்டும் அல்லது பாலித்தீன் பைகளில் அடைத்து நிலத்தடியில் ஆழமாக குழிதோண்டி பத்திரப்படுத்த வேண்டும். கால்நடைகளை மேட்டுப்பாங்கான பகுதிக்கு அழைத்துச் சென்று அப்புறப்படுத்தி அவைகளுக்கான தீவனம் மற்றும் குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். அவ்வப்போது ஏற்படுகின்ற சீற்றங்களை குறித்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
பயிர்கள் மற்றும் வீட்டு பொருட்களை காப்பீடு செய்ய வேண்டும். மின்சாதன இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து விட வேண்டும். குடிநீரை நச்சுத்தன்மை பரவாமல் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். பாம்புகளால் வரும் அபாயத்தை தவிர்க்க வேண்டும். உணவுப் பொருட்களை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
வீரர் மீது தீப்பிடித்தது
தொடர்ந்து, தீயணைப்பு துறையில் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர் தீ விபத்திலிருந்து எவ்வாறு பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்? என்ற விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
அப்போது நகைமுகன் என்ற தீயணைப்பு வீரர் மீது தீ பற்ற வைத்து அதனை சக வீரர்கள் அணைக்கின்ற ஒத்திகை நடைபெற்றது. எதிர்பாராத விதமாக திடீரென்று அந்த வீரர் மீது அதிக அளவில் தீ பரவ ஆரம்பித்தது. இதனால் ஒத்திைக நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர்.
ஆனால் மற்ற தீயணைப்பு வீரர்கள் சுதாரித்துக் கொண்டு உடனடியாக அவர் மீது பற்றிய தீயை அணைத்தனர். ஒத்திகையின்போது, தீயணைப்பு வீரர் ஒருவர் மீது குபீரென தீப்பற்றி கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story