உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயாராக உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
திருவிடைமருதூர்:
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயாராக உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சாமி தரிசனம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தார். அங்கு அவர் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜைகளை செய்தார்.
தொடர்ந்து கோவிலில் உள்ள கோ சாலைக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபட்டார். 27 நட்சத்திர லிங்க சன்னதி, மகாலிங்கசுவாமி சன்னதி, பிரகத் சுந்தர குஜாம்பாள் அம்மன் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலுக்கு வெளியே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலுக்கு தயார்
முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவது என்பது, ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை காட்டுகிறது. தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும், அ.தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்துவது என்பது பல ஆண்டுகளாக நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயாராக உள்ளது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்வோம். தி.மு.க. அரசின் 100 நாள் செயல்பாட்டில் சாதகம், பாதகம் என எதையும் கூற முடியாது. நடுநிலையாக இருக்கிறது. இனி வருங்காலங்களில் என்ன நடக்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வரவேற்கிறோம்
அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை நாங்களும் வரவேற்கிறோம். விஜயகாந்த் நலமுடன் உள்ளார், விரைவில் வருவார். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் சங்கர், மாநில விவசாய அணி இணைச்செயலாளர் டெல்லி சாமிநாதன், பொறியாளர் அணி துணைச்செயலாளர் சுகுமார், மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்காந்த், ஒன்றிய பொருளாளர் குருமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story