குமரியில் 90 ரேஷன் கடைகள் மூடப்பட்டன


குமரியில் 90 ரேஷன் கடைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 17 Aug 2021 2:15 AM IST (Updated: 17 Aug 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் குமரியில் 90 ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

நாகர்கோவில், 
கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் குமரியில் 90 ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வேலைநிறுத்தம்
தமிழகத்தில் 4,350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் அலுவலக பணியாளர்கள், விற்பனையாளர்கள் பணியில் சுமார் 35 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பயிர் கடன், நகை கடன் மற்றும் மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி தொடர்பான புள்ளிவிவரங்கள் வழங்க கால அவகாசம் வழங்க வேண்டும். கடந்த 6 மாதமாக வரவு- செலவு இன்றி முடங்கி கிடக்கும் சங்கங்களுக்கு போதிய நிதி வழங்கிடவும், ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளர் பணியிடம் உருவாக்கி தர வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
ரேஷன் கடைகள் அடைப்பு
அதன்படி குமரி மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது ஈத்தாமொழி, குருந்தன்கோடு, அருவிக்கரை, பாலப்பள்ளம், மாடத்தட்டுவிளை, திருவட்டார் உள்பட 100-க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. இதனால் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூடப்பட்டதை தொடர்ந்து பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
போராட்ட அறிவிப்பை அறியாமல் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காண முடிந்தது. இதுதவிர கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 90 ரேஷன் கடைகளும் மூடப்பட்டன. இதனால் ரேஷன் கடைக்கு வந்த பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மாவட்டம் முழுவதும் நடந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

Next Story