வேனை வழிமறித்து தாக்கிய காட்டுயானை


வேனை வழிமறித்து தாக்கிய காட்டுயானை
x
தினத்தந்தி 17 Aug 2021 2:16 AM IST (Updated: 17 Aug 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

மூடிகெரே அருகே குந்தூர் வனப்பகுதி வழியாக வந்த வேனை, காட்டுயானை தாக்கி கவிழ்த்து போட்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால் வேனில் இருந்த ஒரேகுடும்பத்தினர் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிக்கமகளூரு:

கோவிலுக்கு செல்லும்போது...

  சிக்கமகளூரு அருகே ஜோலதால் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரேகவுடா. இவரது மனைவி மோகினி (வயது 45). இந்த தம்பதியின் மகன் அவினாஷ்(22). இந்த நிலையில் சந்திரேகவுடா, தனது குடும்பத்துடன் கலசா அருகே உள்ள ஒரநாடு அன்னபூர்னேஸ்வரி கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.

  அதன்படி நேற்று அதிகாலையிலேயே சந்திரேகவுடா குடும்பத்தினர், வேனில் அன்னபூர்னேஸ்வரி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களுடன் உறவினர் ராஜம்மாவும் வந்தார். அவர்கள், வேனில் குந்தூர் வனப்பகுதி சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

வேனை வழிமறித்து தாக்குதல்

  அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டுயானை, சந்திரேகவுடாவின் வேனை வழிமறித்தது. இதனை எதிர்பாராத சந்திரேகவுடா, வேனை நிறுத்தினார். காட்டுயானையையும் பார்த்ததும் வேனுக்குள் இருந்த சந்திரேகவுடா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து போய் இருந்தனர்.

  இதையடுத்து காட்டுயானை தும்பிக்கையால், வேன் மீது தாக்குதல் நடத்தியது. பின்னர் வேனை, கவிழ்த்து போட்டு துவம்சம் செய்தது. இதனால் வேன் பலத்த சேதமடைந்தது. வேனில் இருந்த சந்திரேகவுடா மற்றும் குடும்பத்தினர் பலத்த காயம் அடைந்து அலறிதுடித்தனர். சிறிது நேரத்தில் ஒற்றை காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

ஆஸ்பத்திரியில் அனுமதி

  இதனை அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வேனுக்குள் படுகாயம் அடைந்து கிடந்த சந்திரேகவுடா உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மூடிகெரே அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  அங்கு அவர்களுக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சந்திரேகவுடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பரபரப்பு

  இதுபற்றி தகவல் அறிந்த மூடிகெரே வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். வனத்துறை அதிகாரி ரங்கநாத் கூறுகையில், வனப்பகுதி வழியாக வேனில் வந்ததே காட்டுயானை தாக்குதலுக்கு ஆளானது காரணம் ஆகும். தற்போது 4 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

  இச்சம்பவம் குறித்து ஆல்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மூடிகெரேயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story