மாவட்டத்தில் 16 ஜவ்வரிசி ஆலைகளில் சோதனை 80 டன் கலப்பட பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை


மாவட்டத்தில் 16 ஜவ்வரிசி ஆலைகளில் சோதனை 80 டன் கலப்பட பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Aug 2021 3:00 AM IST (Updated: 17 Aug 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 16 ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி, 80 டன் கலப்பட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சேலம்.
ஜவ்வரிசி ஆலைகளில் சோதனை
சேலம் மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகள் உள்ளன. இதில் தற்போது 150 ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த நிலையில் ஜவ்வரிசி உற்பத்தியில் கலப்படம் செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இதை தடுப்பதற்காக கலெக்டர் கார்மேகம் உத்தரவின் பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் சேகோசர்வ் ஊழியர்கள், வணிகவரி அலுவலர்கள், போலீசார் உள்ளனர். இந்த குழுவினர் கடந்த 15 நாட்களாக பனமரத்துப்பட்டி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் உள்ள 16 ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது சில ஆலைகளில் ஜவ்வரிசி உற்பத்தி செய்வதில் கலப்படம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
80 டன் பறிமுதல்
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:-
கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளில் சோதனை நடத்தி வருகிறோம். இதுவரை 16 ஜவ்வரிசி ஆலைகளில் சோதனை நடத்தி உள்ளோம். அப்போது சில ஆலைகளில் மரவள்ளி கிழங்கை நன்றாக உரிக்காமல் மாவாக அரைத்தும், ஜவ்வரிசி வெள்ளை நிறம் வருவதற்காக உணவு தொழிலில் பயன்படுத்த கூடாத வேதிப்பொருளை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 12 ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளில் இருந்து 80 டன் கலப்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த ஆலைகளில் இருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் ஜவ்வரிசி உற்பத்திரியில் கலப்படம் செய்தது தெரியவந்தால் ஆலை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி உற்பத்தி ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story