கலெக்டர் அலுவலகத்தை செவிலியர்கள் முற்றுகை
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை செவிலியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
முற்றுகை
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் நேற்று செவிலியர்கள், ஆய்வக பரிசோதகர்கள், தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கொரோனா இரண்டாம் அலை தடுப்பு பணிக்காக செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், ஆய்வக பரிசோதகர்கள் என பலர் கடந்த மே மாதம் தற்காலிகமாக நியமிக்கப்பட்டோம். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை. பணிக்கு வர வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.
கொரோனா காலத்தில் எங்களது உயிரை பணயம் வைத்து வேலை பார்த்துள்ளோம். மேலும் பஸ் வசதி இல்லாத சமயத்தில் கூட எங்களது சொந்த பணத்தை செலவழித்து வாகனத்தில் வந்து வேலை செய்துள்ளோம். எனவே திடீரென்று எங்களை வேலையில் இருந்து நீக்கியது கண்டிக்கத்தக்கது. இதனால் எங்களது குடும்ப வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே எங்களுக்கு மீண்டும் வேலை நீட்டிப்பு செய்ய வேண்டும். எங்களை பணியில் இருந்து நீக்கிவிட்டு வேறு நபர்களை அந்த இடத்திற்கு தேர்வு செய்வதற்கு பதிலாக, எங்களையே அந்த இடத்தில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும். நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
விரைவில் சம்பளம்
இதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேரை, சுகாதார பணிகள் இணை இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். பேச்சுவார்த்தையின்போது, விரைவில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது செவிலியர்கள் உள்ளிட்டோர் மீண்டும் தங்களுக்கு பணி வழங்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நிதி உதவி வழங்கக்கோரி...
அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த ஜமுனா ராணி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் ஜமுனாராணி நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அதில், எனக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது, புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதற்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மேல் சிகிச்சைக்கு செல்வதற்கு பண வசதி இல்லை. மேலும் குழந்தைகளை காப்பாற்றுவதற்கும் வழி தெரியவில்லை. எனவே எனது சிகிச்சைக்கும், எனது குழந்தைகளின் கல்விக்கும் அரசு நிதி உதவி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை வேண்டும், என்று கூறியிருந்தார்.
Related Tags :
Next Story