நீலகிரியில் கோவில்கள் திறப்பு


நீலகிரியில் கோவில்கள் திறப்பு
x
தினத்தந்தி 17 Aug 2021 3:27 AM IST (Updated: 17 Aug 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

3 நாட்களுக்கு பிறகு நீலகிரியில் கோவில்கள் திறக்கப்பட்டது. அங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஊட்டி

3 நாட்களுக்கு பிறகு நீலகிரியில் கோவில்கள் திறக்கப்பட்டது. அங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அனுமதி இல்லை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மக்கள் ஒரே நேரத்தில் அதிகளவி்ல கூட வாய்ப்பு உள்ளதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டுத்தலங்கள் கட்டாயம் மூடப்பட வேண்டும். மேலும் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 13-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மாரியம்மன் கோவில், லோயர் பஜார் சுப்பிரமணிய சுவாமி கோவில், வேணுகோபால சுவாமி கோவில், எல்க்ஹில் முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டது. 

கோவில்கள் திறப்பு

பக்தர்கள் இன்றி அனைத்து கால பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனால் கோவில்களுக்கு முன்பு நின்றபடி சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டன. முழு ஊரடங்கில் நடந்ததைபோல தேவாலயங்களில் நேற்று முன்தினம் ஆன்லைன் மூலம் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடந்தது. வீடுகளில் இருந்தபடி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் நேற்று ஊரடங்கு தளர்வு என்பதால் கோவில்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட்டது. ஊட்டி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். 

சிறப்பு ஆராதனை

முன்னதாக கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சில கோவில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தேவாலயங்கள் 3 நாட்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. பள்ளிவாசல்களில் மதியம் தொழுகை நடைபெற்றது. வழிபாட்டு தலங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story