மருத்துவ மாணவி ஓட்டிய கார், கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது சிறுமி உள்பட 5 பேர் காயம்


மருத்துவ மாணவி ஓட்டிய கார், கட்டுப்பாட்டை இழந்து மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது சிறுமி உள்பட 5 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Aug 2021 7:16 AM GMT (Updated: 17 Aug 2021 7:16 AM GMT)

குன்றத்தூர் அருகே மருத்துவக்கல்லூரி மாணவி அதிவேகமாக ஓட்டி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மோட்டார்சைக்கிள்கள் மீது மோதியது. இதில் சிறுமி உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார் திருநகரைச் சேர்ந்தவர் காவியா (வயது 22). இவர், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய நண்பர் அக்சத் (22). இவரும் அதே கல்லூரியில் மருத்துவ படிப்பு 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு காரில் வெளியே சென்று விட்டு தாம்பரத்தில் இருந்து வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த கார்

மருத்துவ மாணவி காவியா, காரை ஓட்டி வந்தார். அவர், காரை அதிவேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது. குன்றத்தூர் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், பைபாஸ் சாலைக்கும், சர்வீஸ் சாலைக்கும் நடுவே உள்ள தடுப்பின் மீது ஏறி இடதுபுறமாக சர்வீஸ் சாலைக்கு பாய்ந்து, அங்கு சாலையோரம் டீ கடை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது.

இதை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். கார் மோதியதில் அங்கிருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் சுக்கு நூறாக நொறுங்கின.

5 பேர் காயம்

மேலும் இந்த விபத்தில் சாலையோரம் வாகனத்தில் நின்றிருந்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் கோவூரை சேர்ந்த தர்ஷினி (12) என்ற சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் சிறுமியின் தந்தை திலக் (45) மற்றும் ராஜேஷ், ராஜ்குமார், மதன்குமார் ஆகியோர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மருத்துவ மாணவி காவியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story