திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி


திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 17 Aug 2021 8:03 PM IST (Updated: 17 Aug 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் :
திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையம் அருகில் கலெக்டர் முகாம் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு நேற்று காலை ஒரு பெண், 2 குழந்தைகளுடன் வந்தார். பின்னர் திடீரென அவர் தீக்குளிக்க போவதாக கூறி, பாட்டிலை திறந்து மண்எண்ணெயை உடலில் ஊற்ற முயன்றார். அதை பார்த்ததும் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் துரிதமாக செயல்பட்டு, மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர். மேலும் பெண் உள்பட 3 பேரையும் மீட்டு போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், தீக்குளிக்க முயன்றது திண்டுக்கல் சிதம்பரனார் தெருவை சேர்ந்த ரமேஷ்பாபு மனைவி நாகராணி (வயது 34) மற்றும் அவருடைய 2 குழந்தைகள் என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் கூறுகையில், நாகராணியின் கணவருடைய குடும்பத்தின் பூர்வீக சொத்துகளை கொடுக்கவிடாமல் உறவினர்கள் இடையூறு செய்வதோடு, சொந்தமாக வாங்கிய நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
பரபரப்பு 
இந்த நிலையில் நேற்று முகாம் அலுவலகத்தில் கலெக்டரை சந்தித்து நேரில் முறையிட குழந்தைகளுடன் அவர் வந்துள்ளார். அப்போது விரக்தியில் குழந்தைகளுடன் அவர் தீக்குளிக்க முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தக்க அறிவுரை கூறி அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகம் முன்பு 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story