தருவைகுளத்தில் மீனவர்களின் நீண்டநாள் பிரச்சினை முடிவுக்கு வந்தது
தருவைகுளத்தில் இருந்து இழுவலை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பான மீனவர்களின் நீண்டநாள் பிரச்சினை முடிவுக்கு வந்தது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்தே மீன்பிடி தொழிலுக்கு செல்ல இருதரப்பினும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி:
தருவைகுளத்தில் இருந்து இழுவலை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பான மீனவர்களின் நீண்டநாள் பிரச்சினை முடிவுக்கு வந்தது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்தே மீன்பிடி தொழிலுக்கு செல்ல இருதரப்பினும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இழுவலை
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்த 3 விசைப்படகுகள் தருவைகுளத்துக்கு மாற்றப்பட்டன. இந்த படகுகள் தருவைகுளத்தில் இருந்து கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் இந்த விசைப்படகுகளில் இழுவலையை பயன்படுத்தக்கூடாது என்றும், தருவைகுளத்தில் உள்ள மற்ற மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய வலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருதரப்பு மீனவர்கள் இடையே அப்போதைய மீன்வளத்துறை ஆணையர் கருணாகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அனுமதி ரத்து
இந்த நிலையில் தருவைகுளத்தில் இருந்து இழுவலை மூலம் மீன்பிடிக்க 3 படகுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில் இழுவலை வைத்து மீன்பிடிக்கும் மீனவர்கள் யாராக இருந்தாலும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தொழிலுக்கு செல்லலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறி இருந்தார்.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் உதவி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது. இதில் மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர் வயோலா, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் இரு தரப்பு மீனவர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பிரச்சினை முடிவுக்கு வந்தது
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அப்போது இருதரப்பு மீனவர்களும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்தே மீன்பிடி தொழிலுக்கு செல்ல சம்மதம் தெரிவித்து உள்ளனர்.
தருவைகுளத்தை சேர்ந்த 2 விசைப்படகுகள் ஓரிரு நாட்களுக்குள் மீண்டும் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் என்று தெரிவித்து உள்ளனர். இதனால் நீண்ட நாட்களாக நீடித்து வந்த மீனவர்கள் இடையேயான பிரச்சினை முடிவுக்கு வந்து உள்ளது.
Related Tags :
Next Story