விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.3½ கோடியில் திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு


விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.3½ கோடியில் திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Aug 2021 9:28 PM IST (Updated: 17 Aug 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.3½ கோடியில் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம், 

கலெக்டர் ஆய்வு

மழைக்காலங்களில் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி பஸ் நிலையம் முழுவதும் ஏரிபோல் காட்சியளிக்கிறது. அவ்வாறு பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கும்பட்சத்தில் பஸ்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நகரில் சிறிது நேரம் மழை பெய்தாலே பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்குவது வழக்கமாக உள்ளது.
இவ்வாறு மழைநீர் தேங்குவதை தடுக்கும் பொருட்டும், இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலும் ரூ.3½ கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை மாவட்ட கலெக்டர் டி.மோகன், பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை

அப்போது பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க மேற்கொள்ளப்பட உள்ள திட்டப்பணிகளை பார்வையிட்டு மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும் நகராட்சி அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். மேலும் பஸ் நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அமைந்துள்ள வடிகால் வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும் எனவும், காலியாக உள்ள இடங்களில் நவீன பூங்கா அமைத்திட வேண்டும் என்றும், பஸ் நிலையத்தில் உள்ள பொருட்கள் பாதுகாப்பு அறையை சீரமைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்கும்படியும் உத்தரவிட்டார்.
மேலும் பஸ் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு               கருதியும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திடும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதற்கு உடனடியாக பஸ் நிலையத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

அதனை தொடர்ந்து விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள சிறிய அளவிலான குடிநீர் தொட்டி பழுதானதால் கடந்த 2 மாதமாக அப்பகுதி மக்கள், குடிநீர் இல்லாமல் தவித்து வருவதை அறிந்த மாவட்ட கலெக்டர் டி.மோகன், பழுதான மின் மோட்டாரை சரிசெய்து உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் பின்னர், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி செல்ல ஏதுவாக சிமெண்டு சாய்வுதளம் அமைக்கும்படியும் அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி பொறியாளர் ஜோதிமணி, தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், ரமணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story