நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், 4-வது நாளாக வேலை நிறுத்தம்


நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், 4-வது நாளாக  வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Aug 2021 9:33 PM IST (Updated: 17 Aug 2021 9:33 PM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.28 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது

நாகப்பட்டினம்:
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.28 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
 ஆலோசனை கூட்டம்
நாகை மீன்பிடி துறைமுகத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த 14-ந்தேதி நடந்தது. 
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 14-ந் தேதி முதல் வருகிற 20-ந் தேதி வரை தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4-வது நாளாக வேலை நிறுத்தம்
மேலும் 20-ந் தேதிக்குள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 2 ஆயிரத்து 500 விசைப்படகுகள், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ரூ.28 கோடி மீன் வர்த்தகம் 
நாகை மாவட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.3 கோடிக்கும், காரைக்கால் மாவட்டத்தில் ரூ.2 கோடிக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.2 கோடிக்கும் மீன் வர்த்தகம் நடைபெறும். 3 மாவட்டங்களில் நாளொன்றுக்கு ரூ.7 கோடிக்கு மீன் வர்த்தககம் நடைபெறும்.
இந்தநிலையில் கடந்த  4 நாட்களாக நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரூ.28 கோடிக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர். 
இதுதவிர ஐஸ்கட்டி தொழில் உள்ளிட்ட மீன்பிடி தொழில் சார்ந்த தொழில்களிலும்  பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story