டி.கொளத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிராமம், கிராமமாக சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
பொதுமக்கள் பாராட்டு
அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.கொளத்தூரில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் தான் 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக சில மாதங்கள் மட்டும் பள்ளிக்கூடம் திறந்து செயல்பட்டது.
ஆனால் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் மீண்டும் மூடப்பட்ட பள்ளிக்கூடம் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியானது. இதன் காரணமாக ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் வசிக்கும் கிராமங்களுக்கே நேரிடையாக சென்று பாடம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி அரசு பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி தலைமையில் அறிவியல் ஆசிரியர் சுரேஷ், ஆங்கில ஆசிரியர் ஜெயலலிதகுமாரி, கணித ஆசிரியர் முத்துக்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் லில்லிஅமலாபாய் ஆகியோர் டி.கொளத்தூர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வசித்து வரும் டி.கொளத்தூர், பூசாரிப்பாளையம், கொண்டசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்றனர். பின்னர் அங்கு மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினர். தொடர்ந்து அங்குள்ள மரத்தடியில் சமூக இடைவெளியுடன் அமர வைத்து பாடம் கற்றுக் கொடுத்தனர். இதை பார்த்த பொதுமக்கள், கிராமம் கிராமமாக சென்று பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களை வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story