தியாகதுருகம் பகுதியில் மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதரிடம் விவசாயிகள் கோரிக்கை


தியாகதுருகம் பகுதியில் மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதரிடம் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Aug 2021 5:16 PM GMT (Updated: 17 Aug 2021 5:16 PM GMT)

தியாகதுருகம் பகுதியில் மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்

கண்டாச்சிமங்கலம்

வேளாண் வணிக மையம்

தியாகதுருகம் விருகாவூர் சாலையில் உள்ள உழவர் உற்பத்தியாளர் வேளாண் வணிக மையத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். 
அப்போது உழவர் உற்பத்தியாளர் குழுவினரிடம் குழுவில் எத்தனை விவசாயிகள் உள்ளனர். குழுவில் இல்லாத விவசாயிகளுக்கும் உரம் விற்பனை செய்யப்படுகிறதா? என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது? வேறு ஏதாவது பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். 

மஞ்சள் கொள்முதல் நிலையம்

உழவர் உற்பத்தியாளர் குழுவினர் பால் உற்பத்தி பொருட்களான தயிர், வெண்ணெய், உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பயிற்சி அளித்தால் கூடுதலாக பால் உற்பத்தி பொருட்களையும் விற்பனை செய்வோம் எனவும் தியாகதுருகம் பகுதியில் மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 
இதற்கு பரிசீலனை செய்வதாக கூறிய கலெக்டர், அனைத்து விவசாயிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி உரம் விற்பனை செய்யவும், பருவ நிலை மற்றும் விவசாயிகளின் தேவைக்கு ஏற்றவாறு விதை பொருட்களை விற்பனை செய்ய உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார். 

உழவர் சந்தை

இதைத் தொடர்ந்து தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே சந்தைமேடு பகுதியில் புதியதாக உழவர் சந்தை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர் இந்த பகுதியில் எத்தனை ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது என அதிகாரிகளிடம் கேட்டார். இதற்கு சுமார் 14 ஏக்கர் ஏரி புறம்போக்கு இடம் உள்ளதாகவும், இங்கு தான் காய்கறி, ஆடு மற்றும் மாடுகள் சந்தை நடைபெறுவதாகவும், பஸ் நிலையம் அருகே உழவர்சந்தை அமைந்தால் பொதுமக்கள் வந்து செல்வதற்கு எளிதாக இருக்கும் எனவும் அதிகாரிகள் பதில் கூறினர். 
பின்னர் புறம்போக்கு நிலத்தின் அளவுகள் மற்றும் எல்லைகளை வரைபடத்தில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேளாண்மை துணை இயக்குனர் (விற்பனை மற்றும் வணிகவரித்துறை) உலகம்மைமுருககனி, தியாகதுருகம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கொளஞ்சியப்பன், கிராம நிர்வாக அலுவலர் ராஜா, துப்பரவு பணி மேற்பார்வையாளர் ரமேஷ், குடிநீர் திட்ட பராமரிப்பாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story